கோவிலில் மதுகுடித்ததை கண்டித்ததால் சாமி சிலைகள் உடைப்பு
கருங்கல் அருகே கோவிலில் மதுகுடித்ததை கண்டித்ததால் சாமி சிலைகள் உடைப்பு வாலிபர் கைது;
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள மேல்மிடாலம் தேரிவிளையில் தர்ம சாஸ்தா பத்ரேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலையில் கோவிலில் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி கோவில் தலைவர் தெருவுக்கடை கொட்டக்காட்டுவிளையை சேர்ந்த செல்வராஜ் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தர்மசாஸ்தா பத்ரேஸ்வரி கோவில் வளாகத்தில் மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்த சுதன்ராஜ் (வயது23), விஜய் (24), ஜோர்தான் (24), ராபர்ட் (23) ஆகியோர் மது குடித்துள்ளனர். அப்போது, அங்கு வந்த கோவில் நிர்வாகிகள் அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுதன்ராஜ் கோவில் வளாகத்தில் இருந்த 3 நாகர் சிலைகளை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த குத்துவிளக்கையும் வீசி எறிந்தது தெரியவந்தது. இதையடுத்து சுதன்ராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.