வாலாஜாபாத் அருகே பாலாற்றின் கரையோரம் சாமி சிலை கண்டெடுப்பு
வாலாஜாபாத் அருகே பாலாற்றின் கரையோரம் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.;
சாலை விரிவாக்க பணிகள்
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா பழையசீவரம் குன்றின் மீது லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு காஞ்சீபுரத்தில் இருந்து வரதராஜ பெருமாள் மாட்டு பொங்கல் பண்டிகை நாளன்று வந்து பாரிவேட்டை திருவிழா நடைபெறுவது வழக்கம். அத்தகைய சிறப்புடைய பழையசீவரம் பாலாற்றை ஒட்டிய பகுதிகளில் செல்லும் செங்கல்பட்டு-காஞ்சீபுரம் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
பழைய சீவரத்தை ஒட்டிய பாலாறு பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றபோது பூமிக்கடியில் புதைந்த நிலையில் கிடந்த கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. லட்சுமி நரசிம்மர் அமர்ந்த நிலையில் இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்டபடி ஒரு செவ்வக வடிவ பீடத்தில் அமர்ந்தபடி காட்சி அளிக்கிறார். நரசிம்மரின் இடது தொடையில் லட்சுமி தேவி அமர்ந்த படி இருக்க அவரது இடது கை லட்சுமிதேவியை பிடித்துள்ளது. சிலையின் முகமும், கைகளும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.
விஜயநகர மன்னர்கள் காலத்தை சேர்ந்தது
சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையதலைவர் அஜய்குமார் ஆய்வு செய்த நிலையில்:-
சிலையின் அமைப்பை பொறுத்து இது விஜயநகர மன்னர்கள் காலத்தை சேர்ந்த சிலை என்பது தெரியவந்தது.
இந்த தகவலை உதவி தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ், உதவி கல்வெட்டு ஆய்வாளர்கள் நாகராஜன், பிரசன்னா ஆகியோரும் உறுதிப்படுத்தி உள்ளனர். பழையசீவரம் லட்சுமி நரசிம்ம சாமி கோவில் அருகிலேயே சேதமடைந்த பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதால் ஏராளமான கிராம மக்கள் வருகை தந்து வணங்கி சென்றனர்.