மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் குடும்பத்துடன் சாமி தரிசனம்
வைத்தீஸ்வரன் கோவிலில் மணிப்பூர் கவர்னர் இல.கணேசன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இந்தகோவிலில் வைத்தியநாதசாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன் (செவ்வாய்), தன்வந்திரி, விநாயகர், செல்வமுத்து குமாரசாமி ஆகிய தெய்வங்கள் தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்தகோவிலுக்கு மணிப்பூர் கவர்னரும், மேற்கு வங்காளம் (பொறுப்பு) கவர்னருமான இல. கணேசன் மற்றும் அவரது சகோதரர் இல.கோபாலன் குடும்பத்தினர் நேற்று வைத்தீஸ்வரன்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவருக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் திருநாவுக்கரசு தம்பிரான் கட்டளை சிறப்பான வரவேற்பு அளித்தார். தொடர்ந்து வைத்தியநாதசாமி உள்ளிட்ட சன்னதிகளில் இல.கணேசன் தனது குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு லாமேக் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் லலிதா, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் கவர்னருக்கு வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக சீர்காழி சட்டைநாதர் கோவில் வளாகத்தில் உள்ள தருமபுரம் ஆதீன கிளை மடத்திற்கு இல.கணேசன் தனது குடும்பத்துடன் வந்தார். பின்னர் தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரமாச்சார சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது வைத்தீஸ்வரன் கோவில் சுவாமிநாதன், சீர்காழி சட்டநாதர் கோவில் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.