திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் காளை உருவம் பொறித்த சம்புவராயர் கல்தூண் கண்டெடுப்பு

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் காளை உருவம் பொறித்த சம்புவராயர் கல்தூண் கண்டெடுக்கப்பட்டது.

Update: 2022-11-19 18:45 GMT


விழுப்புரம் அருகே உள்ளது திருவாமாத்தூர் கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. பாடல்பெற்ற தலமான இக்கோவிலில் தற்போது கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இக்கோவிலில் மண்ணில் புதைந்த நிலையில் இருந்த கல்தூண் ஒன்று அண்மையில் வெளியே எடுக்கப்பட்டது. அதில் காளை சின்னமும் பிறை நிலவும் இடம்பெற்று இருக்கிறது. இதனை தொடர்ந்து விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன், அத்தூணை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாமாத்தூர் திருக்கோவில வளாகத்தில் சுமார் 5½ அடி உயரம் கொண்ட 16 பட்டைகளுடன் கூடிய கல்தூண் கண்டறியப்பட்டுள்ளது. சதுர வடிவமுடைய தூணின் அடிப்பாகத்தில் கம்பீரமாக நின்ற நிலையில் திமிலுடன் கூடிய அழகிய காளை உருவமும், பிறை நிலவும் இடம்பெற்றுள்ளன. சிவபெருமானின் வாகனம் காளை. அவர் தலையில் சூடியிருப்பது பிறை நிலவு.

இவை சம்புவராய மன்னர்களுக்கு உரியதான சின்னங்கள் ஆகும். இந்த தூணின் காலம் கி.பி. 11-ம் நூற்றாண்டாகலாம் என்பதை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் வில்லியனூர் வேங்கடேசன் உறுதி செய்துள்ளார். சம்புவராயர் காலத்திலும் திருவாமாத்தூர் கோவிலுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக கண்டறியப்பட்டுள்ள கல்தூண் தற்போது கோவில் வளாகத்திலேயே தூக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது திருவாமாத்தூர் கண.சரவணக்குமார், விழுப்புரம் கரிகாலசோழன் பசுமை மீட்புப்படையை சேர்ந்த அகிலன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்