சம்பா நெல் அறுவடை பணி
சீர்காழி பகுதியில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கியது. மழையால் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.;
திருவெண்காடு:
சீர்காழி பகுதியில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கியது. மழையால் மகசூல் குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சம்பா சாகுபடி
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதியில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு முன்னதாக மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் சம்பா சாகுபடி பணியை தொடங்கினர். தற்போது பல்வேறு இடங்களில் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டார பகுதியில் சுமார் 12 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 11-ந் தேதி பெய்த அதீத கனமழை மற்றும் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.
மழைக்கு தப்பிய சம்பா நெற்பயிர்களுக்கு விவசாயிகள் உரம், பூச்சி கொல்லி மருந்து தெளித்து பாதுகாத்தனர். இதனை தொடர்ந்து சீர்காழி வட்டார பகுதியில் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மகசூல் குறைந்தது
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னொரு காலத்தில் 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது சம்பா சாகுபடி மட்டுமே நடக்கிறது. கடந்த நவம்பர் மாதம் பெய்த கன மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகின. வயல்களில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றி பயிர்களுக்கு உரங்கள் மற்றும் நுண்ணூட்டங்களை தெளித்தோம். அதன் காரணமாக அழுகிய பயிர்கள் மீண்டும் வளர்ந்தது. அதனை தற்போது அறுவடை செய்து வருகிறோம். மழை காரணமாக மகசூல் குறைந்து விட்டது.
நஷ்டம்
ஒரு ஏக்கருக்கு 40 மூட்டை மகசூல் கிடைக்க வேண்டிய நிலையில் 20 மூட்டைகள் கிடைத்துள்ளது. ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய கிட்டத்தட்ட ரூ.30 ஆயிரம் செலவானது. மகசூல் குறைந்ததால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது இன்சூரன்ஸ் தொகை ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்தத் தொகை போதாது. எனவே வேளாண்மை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.