சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்யலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-01 18:45 GMT

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்க்காப்பீட்டு திட்டம்

மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜெ.சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தமிழகத்தின் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில், நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட்' நிறுவனத்தின் மூலம் பயிர்க்காப்பீடு செயல்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக நடப்பு சம்பா பருவத்தில் கிராம அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

282 கிராமங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 282 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள அனைத்து வருவாய் கிராமங்களை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். சம்பா நெற்பயிருக்கு பிரிமீயத்தொகை ஏக்கருக்கு ரூ.526 செலுத்த வேண்டும். அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களை சார்ந்த கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் பயிர்க்கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.மற்ற விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம். கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம்.

15-ந்தேதி கடைசி நாள்

காப்பீடு செய்யும்போது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொண்டு அதற்கான ரசீதை பதிவு செய்த இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்த விவரங்களில் தவறு இருந்தால் காப்பீடு செய்யும் கடைசி தேதிக்குள் பதிவு செய்த இடத்திலேயே சரி செய்து கொள்ளலாம்.சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், முன்கூட்டியே பதிவு செய்து பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்