சேலம் மாநகர காவல்துறை சார்பில்சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சேலம் மாநகர காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2023-01-16 20:50 GMT

சேலம், 

சமத்துவ பொங்கல் விழா

சேலம் மாநகர காவல்துறை சார்பில் அன்னதானப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பட்டு வேட்டி, சட்டை அணிந்து தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். பின்னர் அவர் போலீஸ் அதிகாரிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சர்க்கரை பொங்கல், கரும்புகளை வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சட்டி உடைத்தல், ஸ்லோ சைக்கிளிங் ரேஸ், ஸ்பூனில் லெமன் வைத்து எடுத்து செல்லுதல், கயிறு இழுத்தல், டம்ளரில் தண்ணீர் நிரப்புதல் மற்றும் இசை நாற்காலி உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். முடிவில், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பானை உடைத்தல்

மேலும், மாட்டு வண்டியில் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா ஏறி சிறிது தூரம் ஓட்டி சென்றார். பின்னர் அவர், கண்களை கட்டிக்கொண்டு பானை உடைத்தல் போட்டியில் பங்கேற்றார். அப்போது, அவருக்கு போலீஸ் அதிகாரிகள் கைகளை தட்டி உற்சாகப்படுத்தி ஆரவாரம் செய்தனர்.

மேலும், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் பரதநாட்டியம், ரேக்ளா பந்தயம், நாட்டுபுற இசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்