மழைக்கால நிவாரணம் பெற முடியாமல் தவிக்கும் உப்பள தொழிலாளர்கள்; சிறப்பு முகாம்கள் நடத்த வலியுறுத்தல்
நலவாரியத்தில் சேராததால் மழைக்கால நிவாரணம் பெற முடியாமல் உப்பள தொழிலாளர்கள் தவிக்கின்றனர். எனவே சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்தியாவின் உப்புத்தேவையை பூர்த்தி செய்வதில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் 2-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மற்ற கடலோர மாவட்டங்களை விட தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
23 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி
தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரையிலான கடலோர பகுதிகளில் சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பில் உப்பு உற்பத்தி தொழில் நடந்து வருகிறது. இதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
உப்பள தொழிலில் உப்பு பாத்தி மிதித்தல், உப்பள செம்மை படைத்தல், உப்பள பாத்தி கட்டுதல், உப்பளத்தில் தண்ணீர் பாய்ச்சுதல், உப்பு வாருதல், உப்பு அம்பாரம் ஏற்றுதல், உப்பு லாரிகளில் ஏற்றுதல், உப்பு பண்டல் கட்டுதல், உப்பு பாக்கெட் போடுதல் என பல்வேறு பணிகளில் உப்பள தொழிலாளிகள் ஈடுபடுகின்றனர்.
மழைக்கால நிவாரணம்
இந்த உப்பள தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மழைக்கால நிவாரணத்தொகையாக ரூ.5 ஆயிரம் அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறது. ஆனால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 தொழிலாளர்கள் மட்டுமே இந்த உதவித்தொகையை பெறும் நிலை உள்ளது. இதனால் மற்ற தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் முறையாக நலவாரியத்தில் இணைக்கப்படாததே காரணமாக கூறப்படுகிறது.
ஆகையால் அனைத்து தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க அரசு சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தொழிலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
நலவாரியம் குறித்து தெரிவது இல்லை
தூத்துக்குடி அருகே உள்ள கல்மேடு பகுதியை சேர்ந்த உப்பள தொழிலாளி வேட்டை பெருமாள்:-
உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பல தொழிலாளர்களுக்கு நலவாரியம் குறித்து தெரியாத நிலைதான் உள்ளது. இதனால் அவர்கள் மழைக்கால நிவாரணத்தை பெற முடியாத நிலை உள்ளது. எனவே, அரசு சிறப்பு முகாம்களை நடத்தி அனைத்து உப்பள தொழிலாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நலவாரியத்தில் தொழிலாளர்களை சேர்ப்பதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
தூத்துக்குடியை சேர்ந்த உப்பள தொழிலாளி ராணி:-
நான் நலவாரியத்தில் பதிவு செய்து உள்ளேன். இதன்மூலம் உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 பெற்று வருகிறேன். இதனால் நான் மழைக்கால நிவாரணத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தேன். ஆனால் ஏற்கனவே உதவித்தொகை பெறுவதால் மழைக்கால நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. மழைக்காலங்களில் உப்பளத் தொழில் முடங்கி விடுவதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மாற்றுத்தொழில் எதுவும் இல்லாததால் எங்களுக்கு எந்தவித வருமானமும் கிடையாது. உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் அறிவித்து இருப்பது சந்தோசம்தான். ஆனால், அனைத்து தொழிலாளர்களுக்கும் அந்த நிவாரணம் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லாப பங்கீட்டு தொகை
தூத்துக்குடியை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு மாநில இணை செயலாளர் மா.கிருஷ்ணமூர்த்தி:-
உப்பள தொழில் பருவம் சார்ந்த தொழில். ஒருநாள் மழை பெய்தாலும், அது அவர்களுக்கு பேரிடராக அமையும். வேலைவாய்ப்பு பறிபோய்விடும். இந்த பிரச்சினையை மக்கள் நீண்டகாலமாக சந்தித்து வருகின்றனர். இதனால் மழைக்கால நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன்படி தற்போது கிடைத்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் உப்பள தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் சுமார் 3 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே மழைக்கால நிவாரணம் கிடைத்து உள்ளது. இந்த பிரச்சினைகளை களைய அனைத்து உப்பள தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைக்க வேண்டும்.
நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அந்த நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ஏற்றுமதி செய்யப்படும் உப்புக்கு உற்பத்தி ரீதியான லாப பங்கீட்டு தொகை (லெவி) 3 சதவீதம் வசூலித்தால், நலவாரியத்தை திறம்பட செயல்படுத்த முடியும். இதனால் உப்பள தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த முடியும். உப்பள தொழிலாளர்களுக்கு அதிகமான நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோன்று விபத்துக்கு உள்ளாகும் நிலையும் உள்ளது. எனவே, தொழில் சார்ந்த நோய்கள் பட்டியலில் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.