உப்பு வாரும் பணி தீவிரம்

உப்பு வாரும் பணி தீவிரம்

Update: 2023-04-13 20:04 GMT

அதிராம்பட்டினம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் உப்பு வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே மழைக்காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள்

தஞ்சை மாவட்டம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை ஆகிய பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உப்பளங்கள் உள்ளன. இங்கு கெமிக்கல் உப்பு, உணவு உப்பு ஆகிய 2 விதமான உப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அனைத்து உப்பளங்களும் உப்பு உற்பத்தி செய்வதற்கான அனைத்து வேலைகளும் ஜனவரி மாதம் முதல் கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு பாத்தி சீரமைத்தல், வரப்புபோடுதல், கடல்வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது.

உப்புக்கு குறைந்த அளவு விலைநிர்ணயம் செய்வதாலும், உப்பு உற்பத்தி காலங்களான மார்ச் முதல் செப்டம்பர் வரையில் சமீப காலங்களாக கோடைமழை பெய்து வருவதால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பளங்கள் வீணாகி விடுவதாலும் உப்பு உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடைந்து வந்தனர்.

உப்பு வாரும் பணி

இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் இந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். தற்போது 500 ஏக்கருக்கு குறைந்த அளவு பரப்பளவிலான பகுதிகளில் மட்டுமே உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. தற்போது உப்பளப்பணிகள் முடிந்த நிலையில் கடந்த சில தினங்களாக உப்பு வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை மாவட்ட கடலோரபகுதியில் உப்பளத்தொழில் நலிவடைந்த நிலையில் உள்ளூர் உப்பளத்தொழிலாளர்கள் வேறுதொழிலுக்கு போய்விட்ட நிலையில் தற்போது வெளியூரில் இருந்து உப்பளத்தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழை நிவாரணம்

தற்போது உப்பு உற்பத்திதொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. மீண்டும் உப்பு உற்பத்தி தொழில் தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அரசு மழைக் காலங்களில் நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்