உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு

மீண்டும் பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விலையும் குறைந்ததால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Update: 2022-06-10 17:14 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

மீண்டும் பெய்த கோடை மழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விலையும் குறைந்ததால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நல்லமழை

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம், திருப்புல்லாணி, ஆணைகுடி, கோப்பேரிமடம், உப்பூர், திருப்பாலைக்குடி சம்பை உள்ளிட்ட பல ஊர்களில் ஆயிரக்கணக்கான பாத்திகள் உள்ளன. அது போல் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும்.

இந்த ஆண்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊர்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. இந்த கோடை மழையால் சம்பை, திருப்பாலைக்குடி, உப்பூர் உள்ளிட்ட ஊர்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

பாதிப்பு

இதுகுறித்து உப்பளத் தொழிலில் வேலை பார்த்து வரும் பெரியசம்பை கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி தங்கவேல் கூறியதாவது:- கடந்த ஆண்டு கோடை மழை அதிக அளவு பெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டு உப்பு விளைச்சலும் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகவே இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி சீசன் தொடங்கியதில் இருந்தே கோடைமழை அவ்வப்போது தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் உப்பு விளைச்சலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் உப்பு விளையக்கூடிய பாத்திகளில் மழை நீரும் சேர்ந்து உள்ளது. இதனால் உப்பு உள்ள பகுதிகள் முழுவதும் கலங்களாகவே காட்சி அளித்து வருகிறது. இதனால் உப்பின் நிறம் குறைந்து உள்ளது.

ஏமாற்றம்

70 கிலோ மூடை ரூ.500 வரை விலை போன கல் உப்பு தற்போது ரூ.300-க்கு மட்டுமே விலை போகிறது.இது மிகுந்த ஒரு ஏமாற்றம்தான். இங்கே உற்பத்தி செய்யக்கூடிய உப்புகள் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் லாரி மூலம் அனுப்பி வைக்கப் படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்