தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் 'நெய்தல் உப்பு' விற்பனை: முதல்-அமைச்சர் தொடங்கிவைத்தார்

உப்பு உற்பத்தி இல்லாத காலங்களில் உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை வழங்கும் திட்டத்தையும், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் “நெய்தல் உப்பு” என்ற வெளிச்சந்தை உப்பு விற்பனையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Update: 2022-08-12 23:31 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் உப்பள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். 5 தொழிலாளர்களுக்கு நிவாரண தொகைக்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

2021-2022-ம் ஆண்டிற்கான தொழில்துறை மானிய கோரிக்கையில் இதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் உப்பள தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

நெய்தல் உப்பு

2021-2022-ம் ஆண்டிற்கான தொழில்துறை மானிய கோரிக்கையில் தமிழ்நாடு உப்பு கழகம் அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை "நெய்தல் உப்பு" என்ற புதிய வணிக பெயரில், வெளிச்சந்தையில் விற்பனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் "நெய்தல் உப்பு" என்ற புதிய வணிக பெயரில் அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு நியாயமான விலையில் வெளிச்சந்தையில் விற்பனையை தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழிலாளர் ஆணையர்-முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் ராசாமணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்