நெல்லையில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்

ஆயுத பூஜையை முன்னிட்டு நெல்லையில் பூஜை பொருட்கள் விற்பனை நேற்று மும்முரமாக நடைபெற்றது.

Update: 2022-10-03 22:08 GMT

நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பூஜைகள் நடத்தப்படும். மேலும், வாகனங்களுக்கும் பூஜைகள் நடத்தப்படும். பூஜையின்போது வாழைக்கன்று, மாவிலை கட்டப்படும். அரிசி, பொரி, சுண்டல் போன்றவை பிரசாதமாக வழங்கப்படும். நெல்லையில் வாழைக்கன்று, மாவிலை, பொரி போன்ற ஆயுத பூஜை பொருட்களின் விற்பனை நேற்று மும்முரமாக நடைபெற்றது.நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, டவுன் பகுதிகளில் வாழைக்கன்றுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

நெல்லை பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்திருந்த போதிலும் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மல்லிகை பூ, பிச்சிப்பூ ஆகியவை கிலோ ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்டன. அதேபோல் கலர் பிச்சிப்பூ கிலோ ரூ.600-க்கு விற்பனையானது. அரளிப்பூ, சாமந்தி போன்றவை கிலோ ரூ.500-க்கும், சென்ட் பூ கிலோ ரூ.150-க்கும் விற்பனையானது. ஆப்பிள் ரோஸ் ஒரு கட்டு ரூ.320, பன்னீர் ரோஸ் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் காய்கறி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பூஜை பொருட்களான அவல், பொரி, வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். சரஸ்வதி பூஜையையொட்டி பொருட்களை வாங்க பொதுமக்கள் திரண்டதால் நெல்லை சந்திப்பு, எஸ்.என்.ஹைரோடு, டவுன், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்