பொங்கல் பொருட்கள் விற்பனை அமோகம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் மண் பானை, விறகு அடுப்பு, கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. புதுமண தம்பதிகளுக்கு பொங்கல்படி கொடுக்கவும் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெல்லையில் மண் பானை, விறகு அடுப்பு, கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. புதுமண தம்பதிகளுக்கு பொங்கல்படி கொடுக்கவும் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
மண் பானை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாகரிக மாற்றத்துக்கு ஏற்ப பல்வேறு வசதிகள் வந்தாலும், தமிழர் பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் பனை ஓலைகளால் தீ மூட்டி மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்து வழிபடுவதையே அனைவரும் விரும்புகின்றனர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் விறகு அடுப்பு, அடுப்புக்கட்டி, மண்பானைகள், கரும்பு, பனை ஓலைகள், பனங்கிழங்கு போன்றவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. மண்பானையில் பஞ்சவர்ண நிறம் பூசி அழகூட்டியும் விற்பனை செய்து வருகின்றனர். இவற்றை புதுமண தம்பதிகளுக்கு பொங்கல்படி கொடுப்பதற்காகவும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை, திருச்செந்தூர் சாலையில் சட்டக்கல்லூரி எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் பஞ்சவர்ண பானைகளை வாங்கி செல்கிறார்கள்.
ஆர்டர் கொடுத்து...
பொங்கல் பானை விற்பனை குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ''15 நாட்களுக்கு முன்பாகவே பலரும் பஞ்சவர்ண பானை கேட்டு ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். மண்பானைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த அனைவரும் மீண்டும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மண்பானைகள் அளவு வாரியாக ரூ.500 வரையிலும், பஞ்சவர்ண பானைகள் ரூ.800 வரையிலும், 3 அடுப்புக்கட்டிகள் ரூ.150 வரையிலும் விற்பனையாகிறது'' என்றனர்.
கரும்பு விற்பனை
இதேபோல் நெல்லை டவுன், பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் கரும்பு கட்டுகள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
தேனி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகளை லாரிகள் மூலம் நெல்லைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். ஏராளமானவர்கள் பொங்கல்படி கொடுக்க கரும்பு வாங்கி ஆட்டோ, கார் மூலம் கொண்டு சென்றனர்.
10 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.390 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.40-க்கு விற்பனையாகிறது. பாளையங்கோட்டை மார்க்கெட், நெல்லை டவுன் மார்க்கெட் பகுதிகளிலும் கரும்பு கட்டுகள், மஞ்சள் குலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.
பனை ஓலைகள்
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் பனை ஓலைகள் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
சீவலப்பேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பனை ஓலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. ஒரு ஓலை ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பனங்கிழங்கு
இதேபோல் பனங்கிழங்கு விற்பனையும் மும்முரமாக நடைபெறுகிறது. 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.60-க்கும், 50 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மஞ்சள் குலை ஒரு ஜோடி ரூ.25 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. பாளையங்கோட்டை, அம்பை, சேரன்மாதேவி வட்டாரங்களில் மஞ்சள் குலை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. நெல்லை டவுன் பாறையடி பகுதியில் பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகளுக்கு, விவசாயிகள் சிறப்பு பூஜை செய்து அறுவடையை தொடங்கினர்.
மேலும் அருகன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட மஞ்சள் குலைகள் அறுவடை செய்யப்பட்டன.
இதேபோன்று நெல்லை மாவட்டம் முழுவதுமே, பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.