ரூ.6 கோடி தங்க நகைகளை மோசடி செய்த விற்பனை மேலாளர் கைது
கோவையில் ரூ.6 கோடி தங்க நகைகளை மோசடி செய்த நகைக்கடை விற்பனை பிரிவு மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் ரூ.6 கோடி தங்க நகைகளை மோசடி செய்த நகைக்கடை விற்பனை பிரிவு மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விற்பனை
கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லிகார்ஜூனா லேன் ஜே.எம். ரோட்டை சேர்ந்தவர் ஷாகன்லால் சாத்ரி (வயது 60). மொத்த தங்க நகை வியாபாரி. மேலும் இவர் பெங்ளூருவில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். ஷாகன்லால் சாத்ரி தங்க நகை ஆபரணங்களை தயாரிக்கும் நிறுவனம் மூலம் நகைகளை தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் சென்று விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் ஷாகன்லால் சாத்ரி கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கடந்த 25 ஆண்டுகளாக தங்க நகைகள் விற்பனை செய்து வருகிறேன். இந்த நிலையில் கோவைக்கு அனுப்பப்படும் நகைகளில் விற்பனை ஆகாத நகைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் விரும்பாத நகைகள் 15 நாட்களுக்கு ஒருமுறை லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் பெங்களூருவில் உள்ள எனது கடைக்கு திரும்ப அனுப்பப்பட்டு வந்தது. இந்த பணிகளை எனது கடையில் விற்பனை பிரிவு மேலாளராக கோவையில் பணிபுரிந்த ஹனுமன் திவேஷி (45) என்பவர் கவனித்து வந்தார்.
மோசடி
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி முதல் கடந்த மாதம் 12-ந் தேதி வரை கோவை வெரைட்டிஹால் பகுதியில் உள்ள நகைக்கடைகளில் விற்பனை செய்த நகைகள் போக மீதமுள்ள 15 கிலோ 447 கிராம் நகைககள் லாஜிஸ்டிக் நிறுவனம் மூலம் எனது கடைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் விற்பனை மேலாளர் ஹனுமன் திவேஷி அதில் 1 கிலோ 867 கிராம் நகைகளை மட்டுமே ஒப்படைத்து உள்ளார். மீதம் உள்ள ரூ.6 கோடி மதிப்பிலான 13 கிலோ 580 கிராம் தங்க நகைகளை கணக்கில் காட்டாமல் மோசடி செய்து விட்டார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனது நகைகளை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் பேரில் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹனுமன் திவேஷியை தேடி வந்தனர்.
மேலாளர் கைது
இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது மோசடி செய்த நகைகளை தனது நண்பரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தல்பத் சிங் என்பவரிடம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து நகைகளுடன் தலைமறைவான தல்பத் சிங்கை தேடி வருகின்றனர்.
ஹனுமன் திவேஷியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.