ஆட்டு சந்தையில் விற்பனை மந்தம்

கே.வி.குப்பத்தில் நேற்று நடந்த ஆட்டு சந்தையில் சுமார் 200 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதன் விற்பனையும் மந்தமாக இருந்ததால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனையடைந்தனர்.

Update: 2023-02-06 17:23 GMT

ஆட்டு சந்தை

கே.வி.குப்பம் சந்தைமேட்டில் திங்கட்கிழமைதோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு கே.வி.குப்பம், லத்தேரி, பனமடங்கி, பில்லாந்திப்பட்டு, வடுகந்தாங்கல், காங்குப்பம், முருக்கம்பட்டு, காமாட்சி அம்மன் பேட்டை, சென்னங்குப்பம் உள்பட பல இடங்களில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இங்கு கருப்புநிற வெள்ளாடுகளின் வரத்து அதிகமாக உள்ளது. கிராமதேவதைகளுக்கு நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் இதைத் தேடிவந்து விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். கொரோனா காரணமாக சுமார் 3 ஆண்டுகள் ஆட்டு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபிறகு சிறிதளவே வியாபாரம் நடைபெற்றது. ஆடுகளின் வரத்தும் குறைந்தது. இதனால், வியாபாரிகளின் வருகையும் குறைந்துவிட்டது.

விவசாயிகள், வியாபாரிகள் வேதனை

இந்த நிலையில் நேற்று ஆட்டு சந்தை நடைபெற்றது. வழக்கமாக ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அவை சில மணி நேரங்களிலேயே வுிற்பனை ஆகி விடும். ஆனால் நேற்று நடந்த சந்தையில் சுமார் 200 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்து இருந்தன. அதுவும் பலமணி நேரமாகக் காத்துக் கிடந்தும் போதிய விற்பனை இல்லாமல் மந்தமாகவே இருந்தது.

இதுகுறித்து விவசாயிகள், வியாபாரிகள் கூறுகையில் ஆட்டுக்கு தேவையான தீவனம், போக்குவரத்து செலவு, சந்தைக்கு செலுத்தும் நுழைவுக்கட்டணம், காலை உணவு என ஆகும் அடிப்படை செலவுகூட வியாபாரம் இல்லாத நாட்களில் கிடைப்பது இல்லை. எங்களுக்கு வேறு தொழிலும் தெரியாது. இதை நம்பிதான் இருக்கிறோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்