சேலத்தை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தியுள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சாலை விபத்துக்களின் காரணங்கள் குறித்து ஆராய்ந்து எதிர்வரும் நாட்களில் சாலை விபத்து இல்லாத நிலையை உருவாக்கிடும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலை பாதுகாப்பு விதிகள்
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், செல்போன் பேசியவாறு வாகனம் ஓட்டுபவர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், சாலை சிவப்பு சிக்னல்களை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் 4 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் என சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாவட்டத்தில் வாகன உயிரிழப்பு விபத்துக்களை ஏற்படுத்தியவர்கள் மற்றும் சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது சேலம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்களால் அந்நபர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் "ஏர்ஹாரன்" பயன்படுத்தினால் விதிமுறைகளின்படி அபராதம் விதிக்கப்படுகிறது.
தனியார் பஸ்களில் ஆய்வு
சாலை விதி மீறல்களை கண்காணித்துப் பதிவு செய்திட கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் பஸ்களில் முறையாக வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திடும் வகையில் போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கிராம சாலைகளை சீரமைக்கும் பணிகளை உள்ளாட்சித்துறை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளின் இருபுறங்களிலும் புள் மற்றும் செடிகள் அடர்ந்திருப்பின் அதனை அகற்றி தூய்மைபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான விபத்துக்கள் நெடுஞ்சாலைகளில் ஏற்படுகிறது. இவ்விபத்துக்களை தடுக்கும் வகையில் நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ள முக்கிய இடங்களில் தற்காலிக தடுப்புகளும், நிரந்தர எச்சரிக்கை பதாகைகளும், வாகன ஓட்டிகள் அறியும் வண்ணம் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு நடவடிக்கை
மேலும், தொடர் விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை மற்றும் வருவாய் துறை ஆகிய துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொண்டு எதிர்வரும் காலங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சேலத்தை விபத்து இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். இதற்காக அலுவலர்கள் சாலை பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெகநாதன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உளபட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.