பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
மோசடி மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெகநாதன் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.;
சேலம்,
சேலம் அருகே கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் உயர் கல்வித்துறைக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் `பூட்டர்' அறக்கட்டளை என்ற பெயருடைய தனியார் நிறுவனத்துடன் சான்றிதழ் படிப்புகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கோருவதற்கான 'அஜெண்டா' வைக்கப்பட்டது.
அதேசமயம் அந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகியோர் உள்ளனர். இதனால் பல்கலைக்கழக நிர்வாகம் பாதிக்கப்படும்.
இந்த நிறுவனம் தொடங்க உயர்கல்வித்துறையில் எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை. எனவே விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் தொடங்கிய துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதனிடையே நேற்று முன்தினம் கருப்பூர் போலீஸ் நிலையத்தில் சட்ட ஆலோசகர் இளங்கோவன் புகார் கொடுத்தார். அதில் முறைகேடு புகார் தொடர்பாக பேசுவதற்காக பல்கலைக்கழகத்துக்கு சென்றேன். அப்போது ஜெகநாதன் எனது சாதி பெயரை கூறி திட்டியதுடன் எனக்கு மிரட்டல் விடுத்தார் என்று புகாரில் கூறி உள்ளார்.
அதன்பேரில் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், கூட்டுச்சதி செய்தல், மோசடி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் துணைவேந்தர் ஜெகநாதனை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீசார் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து துணைவேந்தரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு துணைவேந்தர் ஜெகநாதனை போலீசார் சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தினேஷ்குமரன் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது தனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் உள்ளதாக துணைவேந்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி ஒரு வாரகாலத்துக்கு அவர் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இந்நிலையில் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு இன்று திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெகநாதன் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.