பராமரிப்பு இல்லாத பூங்காக்கள் புத்துயிர் பெறுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேலம் மாநகராட்சி 23-வது வார்டில் பராமரிப்பு இல்லாத பூங்காக்கள் புத்துயிர் பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-11-27 21:11 GMT

வெள்ளி கொலுசு தயாரிப்பு

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 23-வது வார்டில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 15 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டில் சூரமங்கலம் உழவர்சந்தை, மாநகராட்சி தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளிகள் உள்ளன. இதுதவிர, அங்கன்வாடி மையங்கள், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், 3 இடங்களில் ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெள்ளி கொலுசு தயாரிப்பு தொழில் பிரதானமாக உள்ளது. அதற்கு அடுத்து ஜவுளி ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

23-வது வார்டை பொறுத்தவரையில் கண்ணகி தெரு உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களை தவிர மற்ற பகுதிகளில் சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. முக்கிய பிரமுகர்கள் என்று எடுத்துக்கொண்டால் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடு இந்த வார்டுக்குட்பட்ட நெடுஞ்சாலை நகரில் தான் அமைந்துள்ளது. வார்டின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் நன்றாக உள்ளன.

பராமரிப்பு இல்லாத பூங்கா

திருவாக்கவுண்டனூர் சந்திப்பு (பைபாஸ்) பகுதியில் கடந்த ஆட்சியில் ரூ.26.77 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. அந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடவும், அங்கு அமர்ந்து பொழுதை போக்கும் வகையில் பூங்கா அமைக்கப்பட்டது.

செடிகள், பூக்கள், நீர்வீழ்ச்சி, மின் விளக்குகள் போன்றவையுடன் பசுமையுடன் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருந்த இந்த பூங்கா தற்போது பழுதடைந்து பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இந்த பூங்காவை உரிய முறையில் சீரமைத்து பராமரிக்க வேண்டும் என்பது வார்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 23-வது வார்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சாக்கடை கால்வாய் வசதி

கண்ணகி தெருவை சேர்ந்த இல்லத்தரசி தமிழ்மொழி:-

மழைக்காலங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருவில் ஆறாக ஓடுகிறது. எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே, புதிதாக சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்வதால் சிரமமாக உள்ளது. எனவே, சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

கண்ணகி தெருவில் ஒரே கட்டிடத்தில் அடுத்தடுத்து 2 ரேஷன் கடைகள் உள்ளன. திருவாக்கவுண்டனூர் பைபாசை தாண்டி மக்கள் ஒரு கிலோ மீட்டர் நடந்து வந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்கிறார்கள். எனவே, இங்குள்ள ஒரு ரேஷன் கடையை பிரித்து அங்கு அமைத்து கொடுத்தால் நல்லதாக இருக்கும்.

சுகாதார சீர்கேடு

ஆண்டிப்பட்டியை சேர்ந்த தேசிங்குராஜன்:-

பழைய சூரமங்கலம், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சாக்கடை கழிவுநீர் வெளியேறி திருவாக்கவுண்டனூர் ரெயில்வே தரைப்பாலம் வழியாக திறந்து வெளியில் செல்கிறது. குறிப்பாக மழை பெய்தால் இந்த பாலத்தில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இந்த பாலம் வழியாகத்தான் சிவதாபுரம், கந்தம்பட்டி, காட்டூர், போடிநாயக்கன்பட்டி, ஆண்டிப்பட்டிக்கு செல்ல வேண்டும். ஆனால் சாக்கடை கழிவுநீர் செல்வதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, பள்ளத்தில் குழாய் அமைத்து அதன் வழியாக கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு டவுன் பஸ்கள் சேவை

சூரமங்கலம் உழவர் சந்தையில் கீரை வியாபாரம் செய்யும் விவசாயி மாதேஸ்வரன்:-

உழவர் சந்தையின் நுழைவு வாயில் முன்பு சிலர் நிரந்தரமாக காய்கறி மற்றும் பழக்கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருவதால் நுகர்வோர்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்யும் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும், உழவர் சந்தையை மறுசீரமைப்பு செய்து கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கலாம். அதிகாலையில் அரசு டவுன் பஸ்கள் உழவர் சந்தைக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பூங்கா சீரமைப்பு

திருவாக்கவுண்டனூரை சேர்ந்த சந்திரன்:-

வார்டு பகுதியில். சுடுகாடு வசதி கிடையாது. எனவே, மின்மயானம் ஏற்படுத்த வேண்டும். திருவாக்கவுண்டனூர் பைபாஸ் மேம்பாலம் கீழ் பகுதியில் பராமரிப்பு இல்லாமல் பூங்கா உள்ளது. இந்த வார்டில் உள்ள ரங்காநகரில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவானது தற்போது செடி, கொடிகள் நிறைந்து புதர்மண்டி கிடக்கிறது. இரவு நேரத்தில் சிலர் அங்கு சென்று மது அருந்துகின்றனர். எனவே பூங்காக்கள் புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்

23-வது வார்டு கவுன்சிலர் அ.சிவகாமி கூறியதாவது:-

திருவாக்கவுண்டனூர் பகுதியில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மயானம் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று வேடியப்ப காலனியில் ரூ.2.50 கோடியில் மின்மயானம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு விரைவில் பணிகள் தொடங்கும். அம்மாசி நகரில் புதிய ரேஷன் அமைக்கப்பட உள்ளது. சுகுமார் காலனி, முல்லைநகர், கலர்காடு பகுதியில் சாக்கடை கால்வாய்களும், திருவாக்கவுண்டனூர் மாரியம்மன் கோவில் முதல் மேத்தா நகர் வரை, கண்ணகி தெரு, காந்தி ஆசிரமம் முதல் குறுக்கு சந்து வரை, கலர்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிய சாலை வசதிகளும் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், அனைத்து பகுதிகளுக்கும் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் கீழ் பகுதியில் பராமரிப்பு இல்லாத பொழுது போக்கு பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வார்டு மக்களின் தேவைகளை எனது கவனத்திற்கு கொண்டு வந்தால் அதை நிறைவேற்றி கொடுப்பது எனது கடமையாகும். மற்ற வார்டுகளை காட்டிலும் 23-வது வார்டை முன்மாதிரி வார்டாக நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்டு மக்களுக்கு வேணடியவை

* சீரான குடிநீர் வினியோகம்

* தேவையான இடங்களில் சாலை, சாக்கடை கால்வாய் வசதி

* பழுதடைந்த குடிநீர் தொட்டியை சீரமைத்தல்

* புதர் மண்டி கிடக்கும் சிறுவர் பூங்கா பராமரிப்பு

* புதிய மின் மயானம் கட்டுமான பணியை தொடங்க வேண்டும்

* புதிய ரேஷன் கடை அமைக்க ஏற்பாடு செய்யலாம்.

Tags:    

மேலும் செய்திகள்