சேலம்-சென்னை இடையே விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சேலம்-சென்னை இடையே விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுமா? என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2023-02-04 21:37 GMT

ஓமலூர்:

சேலம் விமான நிலையம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேலம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் சுமார் 130 ஏக்கரில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. அதன்பிறகு போதிய வருமானம் இல்லாததால் விமான நிலையம் மூடப்பட்டது.

அதன்பிறகு நாடு முழுவதும் உள்ள 2-ம் நிலை நகரங்களை இணைக்கும் வகையில் விமான சேவையை மத்திய அரசு உதான் திட்டத்தின் கீழ் செயல்படுத்த முடிவு செய்தது. அதன்படி, சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் நகரங்களை தவிர, பிற 2-ம் நிலை நகரங்களில் இருக்கும் விமான நிலையங்களில் இருந்து, தனியார் விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு முக்கிய ஊர்களுக்கு விமான சேவை தொடங்கப்பட்டது.

ட்ரூஜெட் விமான சேவை

அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூஜெட் விமான சேவை தொடங்கப்பட்டது. அதாவது 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் மேற்கொண்ட ட்ரூஜெட் விமான நிறுவனம், சேலம்-சென்னை, சென்னை-சேலம் இடையே விமான சேவையை தொடங்கியது. அதன்படி விமானம் சென்னையில் காலை 8.50 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு காலை 9.50 மணிக்கு வந்து சேரும். அதேபோல், மறுமார்க்கத்தில் சேலத்தில் காலை 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 11.10 மணிக்கு சென்றடையும். இந்த விமான சேவையை சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள், தொழில் அதிபர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்பட பலரும் பயன்படுத்தி வந்தனர்.

அதன்பிறகு ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், மேலும் ஓராண்டுக்கு ட்ரூஜெட் நிறுவன விமான சேவை நீட்டிக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி வரை சேலம்-சென்னை விமான சேவையை வழங்கியது. அந்த நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது.

விரிவாக்கம்

இதனால் 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து விமான சேவையை ட்ரூஜெட் நிறுவனம் நிறுத்தி கொண்டது. அதன்பிறகு இதுவரை விமான சேவை தொடங்கப்படவில்லை. இதன் காரணமாக சேலம் காமலாபுரம் விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, சேலம் விமான நிலையத்தை 560 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன. இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக விமான நிலைய விரிவாக்கம் செய்யும் பணிக்காக நிலம் அளவிடும் பணிகள், மரங்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கையகப்படுத்தும் இடத்தில் உள்ள வீடுகள், இதர கட்டிடங்கள் ஆகியவற்றை பல்வேறு கட்டமாக வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அவற்றை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் விமான நிலைய விரிவாக்கத்திற்கு விவசாயிகள் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இதனிடையே, சேலம்-சென்னை இடையே விமான சேவை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

விமான சேவை தொடங்க வேண்டும்

சேலத்தை சேர்ந்த வக்கீல் மணிகண்டன்:-

ஓமலூரில் உள்ள விமான நிலையத்தில் ஓடுதளம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் சிறிய ரக விமானம் மட்டுமே வந்து செல்ல முடியும். 25 அல்லது 40 பயணிகள் செல்லும் வகையில் தான் விமானம் இருக்கிறது. பெரிய ரக விமானங்கள் வந்து செல்ல முடியாது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதோடு, இரவு நேரத்தில் விமானம் வந்து செல்லும் வகையில் ஒளி வசதி ஏற்படுத்த வேண்டும். சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களுக்கும் விமான சேவை தொடங்க வேண்டும். சேலத்தில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெங்களூரு, 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னை, 130 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சி, 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவை ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. எனவே, அந்த அளவுக்கு சேலத்தில் உள்ள விமான நிலையத்தையும் மேம்படுத்தி அதன் சேவையை தொடங்க வேண்டும்.

மிகவும் பாதிப்பு

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் மாரியப்பன்:-

சேலத்தில் விமான சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் அதிபர்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு தற்போது காரில் அல்லது ரெயிலில் தான் பயணம் செய்ய வேண்டியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் மற்ற மாநிலங்களுக்கு வியாபார ரீதியாக பயணம் செய்பவர்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது இந்த விமான நிலையத்தை முறையாக பராமரிக்கவும், அங்கு பணிபுரியும் அலுவலர்களுக்கு சம்பளம், நிர்வாக செலவுகள், மின்சார செலவுகள், பராமரிப்பு செலவுகள் போன்றவை ஒவ்வொரு மாதமும் வீணாக செலவழிக்க வேண்டியிருக்கிறது. எனவே, இன்னும் 3 ஆண்டுகளுக்கு உதான் விமான சேவை திட்டத்தின் மூலம் சலுகை கட்டணத்தில் விமான சேவையை மத்திய அரசு சேலத்திற்கு பயன்படுத்தினால் நிச்சயம் சேலம் விமான நிலையம் காலையிலும், மாலையிலும் சிறப்பாக செயல்படும்.

விவசாயிகள் பாதிப்பு

தும்பிப்பாடியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ்:-

விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் விவசாய நிலங்களை அதிகாரிகள் அளவீடு செய்து கையகப்படுத்தி வருகிறார்கள். ஆனால் தற்போது எந்தவித விமானங்களும், விமான நிலையத்துக்கு வந்து செல்வதில்லை. ஏற்கனவே இயக்கப்பட்ட சிறிய ரக விமானங்களை மட்டும் இயக்கினால் போதுமானது. விமான நிலையம் விரிவாக்கம் பணிகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்