ரவுடியை ரகசியமாக வெளியே அனுப்பிய விவகாரம்: சேலம் மத்திய சிறை அதிகாரிகள், வார்டன்களிடம் டி.ஐ.ஜி. விசாரணை

ரவுடியை ரகசியமாக கேன்டீன் வழியாக வெளியே அனுப்பிய விவகாரம் தொடர்பாக சேலம் மத்திய சிறை அதிகாரிகள், வார்டன்களிடம் கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. தீவிர விசாரணை நடத்தினார்.;

Update: 2022-06-11 22:00 GMT

சேலம்:

ரவுடியை ரகசியமாக கேன்டீன் வழியாக வெளியே அனுப்பிய விவகாரம் தொடர்பாக சேலம் மத்திய சிறை அதிகாரிகள், வார்டன்களிடம் கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. தீவிர விசாரணை நடத்தினார்.

வெளியே அனுப்பினர்

காஞ்சீபுரம் மாவட்டம் பெரியகாஞ்சி பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயது 27). பிரபல ரவுடியான இவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழிப்பறி வழக்கில் சிவகாஞ்சி போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் வசந்த்துக்கு ஜாமீன் கிடைத்தது. இதுபற்றி தெரியவந்ததும் அவரை வேறு ஒரு வழக்கில் கைது செய்வதற்காக கடந்த 4-ந் தேதி சிவகாஞ்சி போலீசார் சேலத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் இதுகுறித்து சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் வசந்த்தை கைது செய்வதற்காக சிறையின் பிரதான நுழைவு வாயில் அருகே காத்திருந்தனர். ஆனால் வசந்த்தை கேன்டீன் ஷெட்டரை திறந்து ரகசியமாக வெளியே அனுப்பி விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகாஞ்சி போலீசார் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பணி இடைநீக்கம்

இதனிடையே இந்த தகவல் வெளியே தெரியவந்ததும் சிறையில் விதிமீறல்கள் நடந்தது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து விசாரணை நடத்தி முதற்கட்டமாக ரவுடியை ரகசியமாக வெளியே அனுப்பியது தொடர்பாக வார்டன்கள் ரமேஷ்குமார், பூபதி ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் விசாரணையில், ஜாமீனில் வெளியே வரும் வசந்த்தை மற்றொரு வழக்கில் கைது செய்ய போலீசார் தயாராக இருப்பது குறித்து ரவுடியின் ஆதரவாளர் ஒருவருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வசந்த்தை சிறையில் வேறு வழியாக ரகசியமாக வெளியே அனுப்புவதற்கு அதிகாரிகளிடம் பேசியதாக தெரியவந்துள்ளது.

டி.ஐ.ஜி. நேரில் விசாரணை

ரவுடியை கேன்டீன் வழியாக வெளியே அனுப்பியது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் நேரில் விசாரணை நடத்துவதற்காக அவர் நேற்று முன்தினம் சேலம் வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று காலை சிறையில் விசாரணையை தொடங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரிடம், டி.ஐ.ஜி. கேட்டறிந்தார்.

இதையடுத்து ரவுடியை ரகசியமாக வெளியே அனுப்பப்பட்ட நாளில் பணியில் இருந்த அனைத்து அதிகாரிகள், வார்டன்கள் மற்றும் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட வார்டன்கள் ஆகியோரிடம் டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் தீவிர விசாரணை நடத்தினார். சிறையின் பிரதான நுழைவு வாயில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. இதனிடையே இந்த விவகாரத்தில் பணம் கைமாறியதாக வந்த புகாரை தொடர்ந்து அதுதொடர்பாகவும் டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்