சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்-சுப.வீரபாண்டியன் பங்கேற்பு
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சுப.வீரபாண்டியன் பங்கேற்று பேசினார்.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மாநகரம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று தாதகாப்பட்டியில் நடைபெற்றது. தாதகாப்பட்டி பகுதி செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் முருகன் வரவேற்றுப்பேசினார். மண்டலக்குழு தலைவர்கள் அசோகன், தனசேகரன் முன்னிலை வகித்தனர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தி.மு.க., அ.தி.மு.க. அண்ணன், தம்பி சண்டை தான். ஆனால் தமிழ்நாட்டில் தாமரை ஒரு நாளும் மலராது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட தயாராக வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் நம் வலிமையை நிரூபித்து காண்பிக்க வேண்டும். உயிரை பணயம் வைத்து மொழிப்போர் போராட்டம் நடைபெற்றது. தி.மு.க.விற்கு தியாக வரலாறு இருக்கிறது. தி.மு.க. வாழும் வரை தான் தமிழ்நாடு வளரும். தி.மு.க. சரிந்தால், தமிழ்நாடு சரியும். கருணாநிதியை போன்று பாதுகாப்பான தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார் என்று கூறினார். கூட்டத்தில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் தமிழரசன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.அண்ணாமலை, கவுன்சிலர் குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.