சேலத்தில் புத்தக கண்காட்சி இன்று நிறைவு

சேலத்தில் இன்றுடன் புத்தக கண்காட்சி நிறைவு பெறுகிறது.

Update: 2022-12-03 21:18 GMT

புத்தக கண்காட்சி

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்து செல்லும் நோக்கத்துடனும் சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் மாநகராட்சி திடலில் புத்தக திருவிழா என்ற பெயரில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நடந்து வரும் இந்த புத்தக கண்காட்சியில் தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். தினமும் காலை முதல் மாலை வரையிலும் புத்தக கண்காட்சிக்கு வருபவர்களை கவரும் வகையில் மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், பட்டி மன்றம், சொற்பொழிவு போன்றவையும் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்று நிறைவு

புத்தக கண்காட்சியின் 14-வது நாளான நேற்று காலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி நடத்தப்பட்டது. இதில், மாணவ, மாணவிகள் பல்வேறு வேடங்களை அணிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு நகைச்சுவை நாடகமும், பிற்பகல் 3 மணிக்கு சிறுகதை அமர்வும், மாலையில் வீணை இசை நிகழ்ச்சியும், பள்ளி மாணவர்களின் குங்பூ தற்காப்பு கலையும் நடைபெற்றது. மேலும் பரத நாட்டியம், கிராமிய பல்சுவை நிகழ்ச்சிகளும் நடந்தது.

சேலத்தில் 14 நாட்கள் நடந்து வந்த புத்தக கண்காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. இதையொட்டி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முடிவில் இரவு 8.15 மணிக்கு புத்தக கண்காட்சி நிறைவு பெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்