எட்டயபுரத்தில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை;5 மினி வேன்கள் பறிமுதல்

எட்டயபுரத்தில்சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்ததாக, 5 மினி வேன்களை பேரூராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-09-05 18:45 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை செய்த, 5 தனியார் குடிநீர் மினி வேன்களை பேரூராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை

எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் தனியார் குடிநீர் மினி வேன்கள் மூலம் தெருக்களில் குடம் தண்ணீர் ரூ.10, ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வேன்களில் முறையான அனுமதியின்றி சுகாதாரமற்ற முறையில் குடிநீர் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்து வந்தனர்.

பேரூராட்சி அலுவலர்கள் சோதனை

இதனடிப்படையில், எட்டயபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பூவையா தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் மற்றும் ஊழியர்கள் நேற்று காலையில் பேரூராட்சி பகுதியிலுள்ள தெருக்களில் குடிநீர் விற்பனை செய்த மினி வேன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது உணவு பாதுகாப்பு தர சான்றிதழ், தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் அனுமதி பெறாமலும், சுகாதாரமற்ற முறையிலும் குடிநீர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

5 மினிவேன்கள் பறிமுதல்

இந்த வகையில் இயங்கிய 5 மினி வேன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பேரூராட்சி செயல் அதிகாரி பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில், இந்த சோதனை அடிக்கடி நடத்தப்படும். எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் தனியார் முறையாக அனுமதி பெற்று சுகாதாரமான குடிநீரை விற்பனை செய்ய வேண்டும். முறையாக அனுமதியில்லாமல் இயங்கும் குடிநீர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்