திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதிகளால் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகள் மலிவு விலையில் விற்பனை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதிகளால் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-01-14 16:19 GMT

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதிகளால் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டது.

கரும்பு சாகுபடி

திருச்சி மத்திய சிறையில் தற்போது விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் உள்பட 1600-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இங்கு கைதிகளுக்கு தொழிற்பயிற்சி மட்டும் இன்றி விவசாய வேலைகளை செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறைத் தோட்டத்தில் சுமார் 24 ஏக்கர் ்பரப்பளவில் மா, பலா, வாழை, தென்னை, நெல்லி, கொய்யா போன்றவையும், காய்கறிகளும் கைதிகள் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கட்டுப்பாடு நிறைந்த மத்திய சிறை வளாகத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு விளைவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கரும்பு ரூ.15

தற்போது தாங்கள் பயிரிட்ட கரும்பை கைதிகள் அமோகமாக அறுவடை செய்திருக்கிறார்கள். இந்த கரும்புகள் கைதிகளால் நடத்தப்படும் சிறை அங்காடி மூலம் ஒரு கரும்பு ரூ.15 வீதம் 10 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.150-க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கரும்பு ரூ.30-க்கு மேல் விற்கப்படுவதால் பொதுமக்கள் இங்கு விற்கப்படும் மலிவு விலை கரும்புகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

இதுபற்றி சிறைத்துறையினர் கூறும்போது, இந்த கரும்பு சாகுபடி பொறுப்பு 22 கைதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கரும்பு விற்பனையில் வரும் ஒரு பகுதியை அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். இதன் மூலம் சிறை கைதிகள் மன அழுத்தம் இன்றி இருப்பார்கள். சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே சென்று அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்கும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்