நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை கண்காணிக்க தனி குழுக்கள்-கலெக்டர் அம்ரித் தகவல்
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கப்படும் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.
இயற்கை வேளாண்மை கூட்டம்
நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தை இயற்கை மாவட்டமாக மாற்றுவதற்கு தயாரிக்கப்பட்ட செயல் திட்ட அறிக்கை விரிவாக எடுத்துரைத்ததை கேட்டறிந்து, செயல் திட்டத்தின் ஆக்கக் கூறுகளை தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல் திட்டத்தை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுஉள்ளது. மாவட்ட அளவிலான செயற்குழுவை மறுசீரமைக்கவும், துணை குழுக்கள் உருவாக்குமாறும், இயற்கை மாவட்டமாக மாற்றுவதற்கு அதிகளவில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்க வேண்டும்.
கண்காணிப்பு
இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் நிலங்களை தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிப்பதோடு, தொழில்நுட்ப அறிவுரைகள் வழங்க வேண்டும். அதற்காக தனி கண்காணிப்பு குழுக்கள் அமைக்குமாறும், இயற்கை வழியில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சந்தைப்படுத்த விரிவாக செயல் திட்டம் தயார் செய்ய வேண்டும். இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பெறுப்பு) ஷிபிலாமேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், விவசாயிகள், தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.