தமிழக-கேரள எல்லையில் ஓட்டல், கடைகளில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை; பொதுமக்கள் குற்றச்சாட்டு

தமிழக-கேரள எல்லையில் உள்ள ஓட்டல், கடைகளில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.;

Update: 2023-07-23 21:00 GMT

தமிழக- கேரள எல்லையில் உள்ள ஓட்டல், கடைகளில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தரமற்ற உணவுப்பொருட்கள்

தேனி மாவட்டத்தில் கேரள மாநில எல்லையில் கூடலூர் நகரம் அமைந்துள்ளது. இதன் அருகில் முல்லைப்பெரியாறு அணையின் லோயர்கேம்ப் உள்ளது. அதேபோல் கூடலூரில் இருந்து குமுளி வழியாக கேரளாவுக்கு மலைப்பாதை உள்ளது. இதனால் வியாபாரம், வணிகம், வேலை தொடர்பாக தினமும் ஏராளமானோர் கூடலூருக்கு வருகை தருகின்றனர். அதேபோல் கேரளாவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் கூடலூருக்கு வருகின்றனர்.

இந்தநிலையில் கூடலூர் நகரில் உள்ள ஓட்டல், தள்ளுவண்டி கடைகள் மற்றும் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஓட்டல்களில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்கப்படுகிறது. புளித்த மாவு மற்றும் பழைய சாதங்களை சூடேற்றி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் ஓட்டல்களுக்கு வரும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

உடல் உபாதைகள்

இதேபோல் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் கெட்டுப்போன இறைச்சி விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சில கடைகளில் சுவையை கூடுதலாக்க ரசாயன பொருட்களுடன் பழைய எண்ணெய்யில் மீன், கோழி இறைச்சிகளை வறுத்து கொடுக்கின்றனர். இதை வாங்கி சாப்பிடும்போது சிறுவர்கள், பெரியவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும் மளிகை கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் தரமற்ற முறையில் விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், கூடலூரில் சமீபகாலமாக கடைகளில் தரமற்ற, சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் விற்கப்படுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட உணவுப்பொருள் தரக்கட்டுப்பாட்டு துறையினர் ஆய்வு செய்து, ஓட்டல், இறைச்சி கடைகளில் தரமான உணவுப்பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்