அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டியது
அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டியது
அதிராம்பட்டினம்:
'பக்ரீத்' பண்டிகையை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டியது.
'பக்ரீத்' பண்டிகை
இஸ்லாமியர்களின் தியாகத்திருநாளான 'பக்ரீத்' பண்டிகை வருகிற 10-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் குர்பானியாக இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்வது இந்த பண்டிகையின் சிறப்பாகும்.
இந்த பண்டிகையை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதி விவசாயிகளிடம் இருந்து ஏராளமான செம்மறி ஆடுகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து அதிராம்பட்டினம் நகரில் உள்ள வர்த்தக பகுதிகளில் விற்பனைக்காக வைத்துள்ளனர்.
ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை
'பக்ரீத்' பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டி விடும். தினமும் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்காக ஆடுகளை திடலில் மேயவிடுவார்கள். இந்த ஆண்டும் வாடிக்கையாளர்கள் பார்வையிடும் விதமாக ஆடுகளை மேயவிட்டுள்ளனர். வாடிக்கையாளர் ஆரோக்கியமான ஆடுகளை தேர்வு செய்து விலைக்கு வாங்கி செல்கிறார்கள். ஒரு ஆடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை போகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.