ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உளுந்தூர்பேட்டை வார சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர்
உளுந்தூர்பேட்டை
வாரச்சந்தை
உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். ஆடுகள் விற்பனைக்கு பெயர் போன இந்த சந்தைக்கு உளுந்தூர்பேட்டை மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருவது வழக்கம். பண்டிகை காலங்களில் இங்கு வியாபாரம் களை கட்டும்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் உளுந்தூர்பேட்டை மற்றும் காட்டுசெல்லூர், வடகுரும்பூர், கிளியூர், சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வந்தனர்.
ரூ.2 கோடிக்கு விற்பனை
ஆடுகளை வாங்குவதற்காக மதுரை, திண்டுக்கல், திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் லாரி, மினி லாரி போன்ற வாகனங்களில் அதிகாலையிலேயே வந்தனர். இதனால் அதிகாலை 5 மணி முதல் வியாபாரம் களை கட்ட தொடங்கியது. வியாபாாிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, ஆடி பெருக்கையொட்டி வார சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. அதிகாலை முதல் வியாபாரிகளும், ஆடுகளுடன் விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் குறைந்த பட்சம் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகள் விலை போனது. மொத்தத்தில் ரூ.2 கோடி அளவுக்கு வியாபாரம் நடைபெற்றது என்றனர்.