வாழவச்சனூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு, மாடுகள் விற்பனை

வாழவச்சனூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடு, மாடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-01-09 17:06 GMT

வாழவச்சனூர் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மேல் ஆடு, மாடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

வாரச்சந்தை

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு சுற்றுவட்டார பகுதியான தச்சம்பட்டு, வெறையூர், தானிப்பாடி, தண்டராம்பட்டு, திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விழுப்புரம், சங்கராபுரம், சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமல்லாமல் விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இங்கு வாங்கப்படும் மாடுகளை வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்கின்றனர்கள்.

இந்த நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மாடுகள் விற்பனைக்கு குவிந்தது. அந்த வகையில் பசு மாடுகளின் விலை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், ஏர் உழுவதற்கு பயன்படும் மாடுகள் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்டது.

ரூ.2 கோடிக்கு விற்பனை

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகள் வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தோம். ஆனால் மாடுகளின் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதனால் குறைந்த அளவே மாடுகள் வாங்கினோம்' என்றனர்.

ஒவ்வொரு பண்டிகைக்கும் மாடுகளை காட்டிலும் ஆடுகளின் வருகை அதிகமாக விற்பனைக்கு வரும். ஆனால் நேற்று ஆடுகள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்காக வந்தது. ஆனால் ஆடுகளின் விலை எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகமாக விற்கப்பட்டது.

நேற்று நடந்த வாரச்சந்தையில் சுமார் ரூ.2 கோடி வரை ஆடு, மாடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

வாரச்சந்தை நடைபெறும் வாழவச்சனூரில் பெரும்பாலும் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையை கடந்து தென்பெண்ணை ஆற்றங்கரைக்கு வரவேண்டும்.

பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி வந்ததால் நேற்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்