குறைத்து வழங்கப்பட்ட சம்பளம்: புவனகிரி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

புவனகிரி பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், தங்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கப்பட்டதை கண்டித்து, நேற்று திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-12 18:45 GMT

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் குப்பைகள் அகற்றுதல் போன்ற சுகாதார பணிகளில் ஈடுபடும் வகையில் பேரூராட்சியில் 80-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் 20 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கிறார்கள்.

இவர்களுக்கு கடந்த மாதத்தை காட்டிலும், இந்த மாதம் குறைந்த அளவில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சம்பளம் பிடித்தம் தொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்திடம் அவர்கள் கேட்டும் உரிய பதில் அளிக்கவில்லை.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் துப்புரவு பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 18 வார்டுகளிலும் குப்பைகள் அள்ளும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு வந்த தொழிலாளர்கள், நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்கள். அப்போது, சம்பளம் பிடித்தம் தொடர்பாக பதில் அளிக்காத நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

அதிகாரிகள் வரவில்லை

மேலும் பேரூராட்சி பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள போதிய உபகரணங்களையும் அதிகாரிகள் அளிப்பதில்லை, இது பற்றி பலமுறை கேட்டும் அவர்கள் மவுனமாகவே இருக்கிறார்கள், பேரூராட்சி (பொறுப்பு) செயல் அலுவலரும் உரிய பதில் அளிப்பதில்லை என்று குற்றம்சாட்டினர்.

இதற்கிடையே மதியம் 12 மணியை கடந்தும் பேராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை.

இதனால், துப்புரவு பணியாளர்கள் கடலூாில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு நேரில் சந்தித்து தங்களது குறைகளை முறையிடலாம் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டனர்.

கடலூரிலும் போராட்டம்

கடலூா் வந்த அவர்கள், கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சம்மேளன மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல், இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடலூர் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம், நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இது பற்றி அறிந்ததும் கண்காணிப்பாளர் பழனிகுமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கலெக்டரிடம் மனு

அப்போது, உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்ற அவர், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதை கேட்ட அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்