குருவரெட்டியூரில் பழமையான அரச மரம் வெட்டி அகற்றம்: நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குருவரெட்டியூரில் பழமையான அரச மரத்தை வெட்டி அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-11 20:58 GMT

அம்மாபேட்டை

குருவரெட்டியூரில் பழமையான அரச மரத்தை வெட்டி அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் அரசமரத்து வீதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரசமரம் உள்ளது. இதனால் அப்பகுதிக்கு அரச மரத்து வீதி என பொதுமக்கள் பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் மரத்தின் கிளைகள் மின் கம்பி மீது உரசி செல்வதாக கூறி நேற்று வெட்டப்பட்டுள்ளன. ஆனால் கிளைகளை வெட்டிய நபர்கள் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அகற்றி உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குருவரெட்டியூர் பகுதி பொதுமக்கள் அனுமதி பெறாமல் மரத்தை வெட்டிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி நேற்று காலை 10 மணி அளவில் குருவரெட்டியூர் பஸ் நிலையம் அருகில் சென்னம்பட்டி, அம்மாபேட்டை, வெள்ளிதிருப்பூர் செல்லும் சந்திப்பு ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் கொட்டும் மழையில் குடையை பிடித்தபடி நின்று கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் கூறும்போது, 'மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வருவாய் துறையினருக்கு முறையாக புகார் கொடுங்கள்' என கூறினார்கள். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குருவரெட்டியூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன், அம்மாபேட்டை நில வருவாய் ஆய்வாளர் ரதி ஆகியோர் அனுமதியின்றி மரத்தை வெட்டிய நபர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்