சக்திமாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு திருவிழா

Update: 2023-04-05 17:15 GMT


சேவூர் அருகே முதலிபாளையம் சக்திமாரியம்மன் கோவிலில் பங்குனிமாத பூச்சாட்டு திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனித்திருவிழா

சேவூர் அருகே பாப்பாங்குளம் ஊராட்சி முதலிபாளையத்தில் சக்தி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் பங்குனி திருவிழா கடந்த 1 -ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் பூச்சாட்டுடன் தொடங்கியது.

இதையடுத்து தினசரி காலை, இரவு நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனைகளும் நடைபெற்றது.

மாவிளக்கு

முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்மை அழைத்தல், காலை 6 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து சக்தி மாரியம்மனை வழிபட்டனர். இதையடுத்து காலை 7 மணிக்கு, பூவோடு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து இரவு 7 மணிக்கு கம்பம் களைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு மஞ்சள்நீராடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழா நிகழ்ச்சிகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்