புதுஆறு படித்துறைகளில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா?

ஆண்டுதோறும் உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில் புதுஆறு படித்துறைகளில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-10-14 21:38 GMT


ஆண்டுதோறும் உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில் புதுஆறு படித்துறைகளில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

செயற்கையான ஆறு

ஆறுகள் பொதுவாக மலைப்பகுதிகளில் தொடங்குகின்றன. இயற்கையாகவே தொடங்கிய ஆறுகள் மேட்டில் இருந்து பள்ளத்தை நோக்கி செல்லக்கூடியவை. ஆனால் பள்ளத்தில் இருந்து மேட்டுப்பகுதிகளை நோக்கி செல்லக்கூடிய ஆறு தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் செல்கிறது.இந்த ஆற்றை புதுஆறு என்றும் கல்லணை கால்வாய் என்றும் மக்கள் அழைப்பார்கள். கடந்த 1935-ம் ஆண்டு காவிரி பாசன நீர்த்தடமாக திறக்கப்பட்டது. ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களால் கைமுறையாக தோண்டப்பட்ட செயற்கையான ஆறாகும். பணிகள் 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இந்த திட்டத்தை முடிக்க 5 ஆண்டுகள் ஆனது.

149 கி.மீட்டர் தூரம்

தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒரு பகுதி பயன்பெறும் வகையில் இந்த கல்லணைக்கால்வாய் வெட்டப்பட்டது. இந்த பாசன ஆறு வெட்டப்பட்டபோது மழைகாலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகாமல் செல்ல வடிகால்களும் முறையாக செப்பனிடப்பட்டது. காட்டாறும், பாசன ஆறும் கலக்காத வகையில் கல்ணைக்கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. பாசன ஆறு மேல்பகுதியிலும், காட்டாறு அதன் அடிப்பகுதியிலும் செல்லும்.கல்லணையின் தலையணையில் இருந்து தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரை 149 கிலோமீட்டர் இந்த புதுஆறு செல்கிறது. இந்த புதுஆறு மனிதமுயற்சியின் மாபெரும் சாதனை என்றால், இதன் கட்டுமான தொழில் நுட்பம் மனிதனின் கற்பனை வளத்தின் உச்சம்.

ஆபத்தானவை

எல்லா நீரோட்டங்களும் மேட்டில் இ, ருந்து பள்ளம் நோக்கி ஓடி செல்வது இயற்கையின் விதியென்றால், மனிதன் முயற்சித்த இந்த புதுஆறு பள்ளத்தில் இருந்து மேடு நோக்கி ஓடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஆறு தன் வழியில் ஓடும் காட்டாறுகளுக்கு தலைதாழ்த்தி தனக்கு மேல், மேல்நிலை கால்வாய் வழியாக வழிவிட்டும், கழிவுநீர் கலக்காத வகையில் சைபன் எனப்படும் சுரங்கங்களுக்குள் பதுங்கியும் ஓடுவது ஆச்சர்யமான அதிசயம்.ஒரு காலத்தில் மானாவாரி நிலமாக இருந்த தெற்கு தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, மணல்மேல்குடி, நாககுடி வரையிலான பகுதிகளில் உள்ள 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவு பாசனம் பெறுகிறது. இப்படி பாசனத்திற்கு முக்கியத்துவமாக திகழும் இந்த ஆறு மிகவும் ஆபத்தானவை. மேற்பரப்பில் இந்த ஆற்றை பார்க்கும் தண்ணீர் மெதுவாக செல்வது போன்று தோன்றும். ஆனால் கீழ்பகுதியில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருக்கும்.

படித்துறைகளில் தடுப்பு கம்பிகள்

இதனால் நீச்சல் தெரிந்தவர்களே தண்ணீரில் இழுத்து செல்லப்படும் சம்பவங்களும் நடைபெறும். இந்த புதுஆறானது பிணம்தின்னி ஆறு என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் வந்தாலே ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட நபர்களை பலிவாங்கி விடும். இப்படி ஆபத்தான புதுஆற்றில் குளிப்பதற்காக பல்வேறு இடங்களில் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.தஞ்சை பெரியகோவில் அருகே படித்துறை, ஜி.ஏ.கெனல் ரோட்டில் பிள்ளையார்கோவில் அருகே படித்துறை, எம்.கே.மூப்பனார் சாலையில் சுற்றுலா ஆய்வுமாளிகை அருகே படித்துறை, வண்டிக்காரத்தெரு அருகே படித்துறை, இர்வீன்பாலம் அருகே படித்துறை என பல இடங்களில் மக்கள் குளிப்பதற்கு வசதியாக படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பு இந்த படித்துறைகளில் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

அகற்றம்

இதனால் படித்துறைகளில் நின்று குளிப்பவர்களை தண்ணீர் இழுத்து சென்றாலும் தடுப்பு கம்பிகளை பிடித்து கொண்டு தப்பித்து விடுவார்கள். மேலும் பாலங்களில் இருந்து தண்ணீரில் குதித்து குளிப்பவர்களும் தண்ணீரில் இழுத்து செல்லும்போது படித்துறைகளில் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கம்பிகளை பிடித்து கொள்வார்கள். இப்படி மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த தடுப்பு கம்பிகள் தற்போது இல்லை.

புதுஆற்றின் தரைப்பகுதியிலும், கரைகளிலும் சிமெண்டு தளம் அமைக்கும் பணியின்போது படித்துறைகளில் இருந்த தடுப்பு கம்பிகள் எல்லாம் அகற்றப்பட்டன. அதன்பிறகு இந்த தடுப்பு கம்பிகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால் படித்துறைகளில் இருந்து குளிப்பதற்கு கூட மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். இந்த ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் படித்துறைகளில் குளிப்பவர்களை இழுத்து செல்லும்போது பிடிமானம் எதுவும் இல்லாததால் தண்ணீரில் இழுத்து செல்லப்படும் ஆபத்தான நிலை உள்ளது.

எதிர்பார்ப்பு

எனவே ஆண்டுதோறும் அதிகரிக்கும் உயிர் பலியை தடுக்கும் வகையிலும், மக்களின் பாதுகாப்பு கருதியும் படித்துறைகளில் மீண்டும் தடுப்பு கம்பிகள் அமைக்க சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்