மழை வெள்ளம் வருவற்கு முன்பே சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்: கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

மழை வெள்ளம் வருவற்கு முன்பே சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-11-03 18:45 GMT

சடையநேரி கால்வாயில் மழை வெள்ளம் வருவதற்கு முன்பே தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் கண்ணபிரான், வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கலெக்டருக்கு பாராட்டு

கூட்டத்தில் சாஸ்தாவிநல்லூர் கிராம அபிவிருத்தி சங்கம், உழவர் சங்கம் சார்பில் முருங்கை சாகுபடிக்கு கூடுதல் கடன் மற்றும் கடன் தவணையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி தந்ததால், கலெக்டருக்கு விவசாயிகள் குத்துவிளக்கு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர்.

சடையநேரி கால்வாய்

பின்னர் விவசாயிகள் பேசுகையில், பனை விதைகள் நடும் போது, தரிசு நிலங்களில் நடுவதால் அதனை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் பனை மரம் வளருவதற்கு வசதியான இடங்களை தேர்வு செய்து நட வேண்டும். அதன் மூலம் பதநீர் இறக்கி கருப்பட்டி தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் நிறைவேற்ற வேண்டும். மழை வெள்ளத்தால் அதிக அளவில் தண்ணீர் கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில், மழை, வெள்ளம் வருவதற்கு முன்பே சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும். கருமேனி ஆற்றில் உள்ள கருவேலமரங்களை வேரோடு அகற்ற வேண்டும். வெள்ளநீர்க்கால்வாய் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் சில கிலோ மீட்டர் தூரம் மட்டும் தோண்டப்படாமல் உள்ளது. சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அவர்களுடன் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புத்தன்தருவை குளம், கடம்பாகுளத்தை தூர்வார வேண்டும். கடம்பாகுளம் மறுகால் ஓடையில் தடையின்றி தண்ணீர் செல்வதற்கு வசதியாக சீரமைக்க வேண்டும். களைக்கொல்லி மருந்தை தடை செய்ய வேண்டும். ஸ்ரீவைகுண்டம் வடகாலில் பிசான சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேய்க்குளம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நெல்லுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டும். போதிய உரம் இருப்பு வைக்க வேண்டும் என்று கூறினர்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துராணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்து குமாரசாமி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்