சாலிகிராமத்தில் கடன் தொல்லையால் விபரீத முடிவு: விஷம் தின்று மகளுடன் சித்த மருத்துவர் தற்கொலை

சாலிகிராமத்தில் கடன் தொல்லையால் அளவுக்கு விஷம் தின்று மகளுடன், சித்த மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். மனைவிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update: 2023-05-13 04:36 GMT

கோயம்புத்தூரை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 60). சித்த மருத்துவராக இருந்து வந்தார். இவரது மனைவி சாருமதி (57). தமிழக நெடுஞ்சாலைத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் ஜனபிரியா (24), பட்டப்படிப்பு படித்துள்ளார். மனைவி சாருமதியும், மகள் ஜனபிரியாவும் விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், திலகர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜனபிரியா தனது உறவினர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் நாங்கள் குடும்பத்துடன் நவபாஷானம் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதையறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்ததைடுத்து, நள்ளிரவில் அவர்களது வீட்டுக்கு விரைந்து சென்றனர். கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதையடுத்து 3 பேரையும் உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கங்காதரனும், அவரது மகள் ஜனப்பிரியாவும் இறந்து போனார்கள்.

அவரது மனைவி சாருமதி மட்டும் அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விருகம்பாக்கம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஆகியோர் விரைந்து சென்று இறந்து போன தந்தை, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், சித்த மருத்துவரான கங்காதரன் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நிலையில், வேலையை விட்டு நின்று விட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். கோயம்புத்தூரில் இவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், அவர், வேலைக்கு செல்லாமல் அதிக அளவில் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியான மனைவி சாருமதி சென்னைக்கு பணியிடமாறுதல் பெற்ற நிலையில், சென்னை சாலிகிராமம் அடுக்குமாடி குடியிருப்பில் மகளுடன் வசித்து வந்துள்ளார்.

அவ்வப்போது கங்காரதரன் சென்னை வந்து தனது மனைவி, மகளை பார்த்துவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் கங்காதரனுக்கு அதிக அளவில் கடன் தொல்லை இருந்து வந்ததாகவும், தனது உறவினர்கள் தங்களுக்கு செய்வினை செய்து விட்டதாக கருதி கொண்டு உறவினர்களிடம் பழகுவதையும், பேசுவதையும் நிறுத்தி உள்ளார்.

மேலும் கங்காதரனுக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து நவபாஷான விஷத்தை தனது மனைவி, மகளுக்கு கொடுத்துவிட்டு தானும் உட்கொண்டு இறந்ததாக கூறப்படுகிறது.

சிகிச்சை பலனின்றி கணவரும், மகளும் இறந்து போன நிலையில் மனைவி சாருமதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இவர்கள் தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணத்தில் விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை பெற்று வரும் சாருமதி குணமடைந்து பேசினால் மட்டுமே தற்கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்