பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
போலீஸ் ரோந்து வாகனம் விபத்தில் சிக்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் சுபாஷ் முதல் தெருவைச் சேர்ந்தவர் வள்ளிநாயகம் (வயது 32). இவர், 2013-ம் ஆண்டு போலீசில் வேலைக்கு சேர்ந்தார். ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை காவலர் பிரிவில் பணியாற்றி வந்த இவர், தற்போது திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ரோந்து வாகனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார்.
இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ஆகும். இவருடைய மனைவி திலகவதி (26). இவர், அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 5-ந் தேதி அதிகாலையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனுடன், போலீஸ்காரர் வள்ளிநாயகம் ரோந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருமுல்லைவாயல் அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி ரோந்து வாகனம் விபத்துக்குள்ளானது.
இதில் ரோந்து வாகனத்தின் முன்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீஸ்காரர் வள்ளிநாயகம் இருவரும் லேசான காயம் அடைந்தனர்.
இதையடுத்து போலீஸ் ரோந்து வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதாக கடந்த 8-ந் தேதி போலீஸ்காரர் வள்ளிநாயகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் சேதமடைந்த வாகனத்துக்கான செலவையும் அவரே ஏற்றுக்கொள்ளும்படி கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த வள்ளிநாயகம், சக போலீஸ்காரர்களிடம் இதுபற்றி கூறி புலம்பி வந்துள்ளார்.
வள்ளிநாயகத்தின் 2 மகன்களும் நெல்லையில் வசிக்கும் தங்கள் பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டனர். வள்ளிநாயகமும், அவருடைய மனைவி மட்டும் வீட்டில் இருந்தனர். நேற்று காலை வள்ளிநாயகத்தின் மனைவி திலகவதி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் வள்ளிநாயகம் மட்டும் தனியாக இருந்தார்.
வேலைக்கு சென்ற திலகவதி, தனது கணவருக்கு போன் செய்தார். பலமுறை போன் செய்தும் வள்ளிநாயகம் போனை எடுக்கவில்லை. இதனால் அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் ஹரி என்பவருக்கு தகவல் கொடுத்தார். அவர் சென்று பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறையில் போலீஸ்காரர் வள்ளிநாயகம் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீசார், தற்கொலை செய்த வள்ளிநாயகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.