கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் பணிகள் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

Update: 2022-11-23 18:45 GMT


போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்தஆய்வுகள், விடுமுறை தின இரவு ஆய்வுகளை கைவிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட கணினி இயக்குபவர்கள் அனைவருக்கும் இளநிலை உதவியாளர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் ஒட்டு மொத்த சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.

பொதுமக்கள் அவதி

அதன்படி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டு மொத்த சிறு விடுப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்றாட அலுவலக பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பல்வேறு தேவைகளுக்காக அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இவர்களது போராட்டம் இன்று 2-வது நாளாகவும் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்