ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
காலவரையற்ற வேலை நிறுத்தம்
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்ற பெருகி வரும் மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும், ஊழியர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் சுமார் 450 ஊழியர்கள் உள்ளனர். இதில் சுமார் 170 பேர் மட்டுமே நேற்று பணிக்கு வந்தனர். நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறை முகமை, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு பெரும்பாலான பணியாளர்கள் பணிக்கு செல்லாததால் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊழியர்கள் பணிக்கு வராததால் பணிகள் முற்றிலுமாக முடங்கியது.
ஆர்ப்பாட்டங்கள்
இதுபற்றி நிர்வாகிகள் கூறுகையில், "எங்களது கோரிக்கை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும், மாவட்ட தலை நகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். அதன்பிறகு சென்னை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர்.