மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.20 லட்சம் நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில் உள்ள கிழக்காவாதுக்குடி பகுதியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினர்.
திருவாரூர்;
திருவாரூரில் உள்ள கிழக்காவாதுக்குடி பகுதியில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. வழங்கினர்.
மக்கள் நேர்காணல் முகாம்
திருவாரூரில் உள்ள கிழக்காவாதுக்குடி கிராமத்தில் கீழகாவாதுக்குடி, ராமகயை, வடக்கு சேத்தி ஆகிய கிராமங்களுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமில் 146 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். முகாமில் 200 மனுக்கள் பெறப்பட்டு 185 மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் 2பேருக்கு தையல் எந்திரங்களும், வருவாய் துறை சார்பில் 41 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாஆணையும், 39 பேருக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
ஸ்மார்ட் கார்டு
வட்ட வழங்கல் துறை சார்பில் 50 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வேளாண்துறைசார்பில் 10 பேருக்கு நெல் நுண்ணூட்டம் உயிர் உரம் உள்ளிட்ட இடுப்பொருட்களும், தோட்டக்கலைதுறை சார்பில் 10 பேருக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டசத்து தன்னிறைவை மேம்படுத்த பழச்செடி தொகுப்பு வழங்கப்பட்டது.முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் தேவா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலசந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பொன்னியின் செல்வன், கீழக்காவாதுக்குடி ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி கலைகோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.