ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் திருட்டு

வலங்கைமான் அருகே ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை ஊழியரை வங்கியில் இருந்து பின்தொடர்ந்து சென்று ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-08-22 18:00 GMT

வலங்கைமான்;

வலங்கைமான் அருகே ஓய்வு பெற்ற வேளாண்மைத்துறை ஊழியரை வங்கியில் இருந்து பின்தொடர்ந்து சென்று ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

வேளாண்மை துறை ஓய்வு பெற்ற ஊழியர்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கோவிந்தகுடி கீழத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது72). வேளாண்மை துறை ஓய்வு பெற்ற ஊழியரான இவர் நேற்று மதியம் வலங்கைமானில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை எடுத்து தனது மொபட்டில் வைத்துக்கொண்டு வலங்கைமானில் இருந்து பாபநாசம் ரோட்டில், கோவிந்தகுடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். விருப்பாச்சிபுரம் துணை மின் நிலையம் அருகே கிருஷ்ணமூர்த்தி வந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கிருஷ்ணமூர்த்தியை மறித்து உங்கள் பணம் கீழே கிடக்கிறது என கூறினர்.

கண்காணிப்பு கேமரா பதிவுகள்

இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி மொபட்டில் இருந்து இறங்கி கீழே பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் கிருஷ்ணமூர்த்தியின் கவனத்தை திசை திருப்பி அவரது வாகனத்தில் மறைவாக வைத்திருந்த ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை திருடிக்கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்தும் மர்ம நபர்களை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்