தஞ்சை போலீஸ் பல்பொருள் அங்காடியில் ரூ.40 லட்சம் மோசடி

தஞ்சையில் உள்ள போலீஸ் பல்பொருள் அங்காடியில் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸ்காரர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-13 20:22 GMT


தஞ்சையில் உள்ள போலீஸ் பல்பொருள் அங்காடியில் ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸ்காரர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்பொருள் அங்காடி

தஞ்சை மேம்பாலம் அருகே தஞ்சை மாவட்ட போலீஸ் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் அருகே மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம், எதிரில் டி.ஐ.ஜி. அலுவலகம், ஆயுதப்படை மைதானம் உள்ளிட்டவையும் செயல்பட்டு வருகிறது.இந்த பல்பொருள் அங்காடியில் போலீஸ்காரர்களுக்கு அனைத்து விதமான பொருட்களும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அங்காடியில் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் போலீஸ்காரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

முறைகேடு

இந்த நிலையில் போலீஸ் அங்காடியில் உள்ள பொருட்களை சரிபார்த்தபோது அதில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. அதாவது கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரை உள்ள கணக்குகளை தணிக்கை அதிகாரிகள் தணிக்கை செய்த போது, இந்த முறைகேடு நடந்தது தெரிய வந்தது.அங்காடிக்கு விற்பனை செய்வதற்காக வாங்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை நிலையத்தில் இல்லை என்பது தெரிய வந்தது. ஆனால் பொருட்கள் வாங்கப்பட்டதற்கான பில் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தும் அந்த பொருட்கள் விற்பனை செய்ததற்கான எந்த ஆவணங்களும் இல்லை. இது குறித்து விசாரணை செய்தபோது அந்த பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

ரூ.40 லட்சம் மோசடி

மேலும் அங்காடியில் உள்ள பொருட்கள் அனைத்தும் விற்பனை ஆகாதது போல் கணக்கு காட்டியுள்ளனர். இதில் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த அங்காடியில் பணியாற்றி வரும் போலீஸ்காரர் பாலச்சந்திரன், குறைந்த விலையில் வாங்கப்பட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மளிகை பொருட்களை தனது மைத்துனர் பாஸ்கரனின் கடைக்கு அனுப்பி முறைகேடாக அதிக விலைக்கு விற்பனை செய்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கைது

இதுகுறித்து தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் தணிக்கை அதிகாரிகள் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில், தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) கவிதா மற்றும் போலீசார் அங்காடியில் பணியாற்றி வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீராச்சாமி(வயது 54), போலீஸ்காரர்கள் வீரம்மாள்(29), பாலச்சந்திரன்(45), பாலச்சந்திரனின் மைத்துனர் பாஸ்கரன்(40), இவரது சகோதரியும், பாலச்சந்திரனின் மனைவியுமான சித்ரா(38) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பெண் போலீசார் சிலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்