பல்லடம்:
பல்லடம், ஜவுளி உற்பத்தியாளர்களின் நூல் விலை உயர்வை கண்டித்து நேற்று நடந்த 7-வது நாள் வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக ரூ.700கோடிக்கு துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்த போராட்டம்
விசைத்தறி ஜவுளி தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக இருந்து வரும் நூல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் ஜவுளித் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நூல் விலை உயர்வை கண்டித்தும், விலையை கட்டுப்படுத்தக்கோரியும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 22-ந் தேதி முதல் 15 நாட்கள் தொடர் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். வேலைநிறுத்தம் காரணமாக திருப்பூர், கோவை, மாவட்டங்களில் 2½ லட்சம் விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று 7 -வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால், ரூ.700 கோடி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
வேலை நிறுத்த போராட்டத்தால், விசைத்தறி தொழிலாளர்கள் மட்டுமன்றி, அதனை நம்பியுள்ள வாகன ஓட்டுனர்கள், கலாசு தொழிலாளர்கள், உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள், ஒர்க் சாப் தொழிலாளர்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே மத்திய, மாநில அரசுகள் நூல் விலையை கட்டுக்குள் கொண்டுவந்து ஜவுளித் தொழிலை காப்பாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தீவிரமடைந்து வருகிறது.