வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி: பா.ஜனதா நிர்வாகிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரத்தில் பா.ஜனதா நிர்வாகிக்கு முன்ஜாமீன் வழங்க மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.;
மதுரை,
கடந்த 3-ந்தேதி வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலை உள்ளது என்று டுவிட்டரில் வந்த தகவலை, நான் பார்வர்டு செய்துள்ளதாகவும், அதனால் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவதூறு பரப்பியதாகவும், எனது தகவலை 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சமூகவலைதளங்களில் பார்த்து இருப்பதாகவும் கூறி, தூத்துக்குடியைச் சேர்ந்தவர் புகார் அளித்து உள்ளார்.
மேலும் அவரது புகாரில், என்னுடைய தகவல்களால் தூத்துக்குடி பழைய பஸ்நிலைய பகுதியில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். அதன்பேரில் தூத்துக்குடி போலீசார் என் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கை
நான் டெல்லியில் ஐகோர்ட்டு உள்ளிட்ட கோர்ட்டுகளில் வக்கீலாக பணியாற்றி வருகிறேன். மேலும் டெல்லி ஐகோர்ட்டு வக்கீல் சங்க உறுப்பினராகவும் உள்ளேன். பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருப்பதால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் பொய்யான புகாரின்பேரில் என் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏனென்றால் டுவிட்டரில் வந்த தகவலைத்தான் நான் பார்வர்டு செய்தேன். நானாக உள்நோக்கத்துடன் எந்த தகவலையும் தயார் செய்யவில்லை. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களை யார் தயார் செய்தாரோ, அவர்தான் குற்றவாளி என சட்டம் சொல்கிறது. அதுமட்டுமல்லாமல் லட்சக்கணக்கானவர்கள் பார்த்ததாக கூறப்படும் டுவிட்டர் தகவலின் அடிப்படையில் இருமாநிலத்திற்கு இடையே எந்தவிதமான மோதல்களோ, விரும்பத்தகாத சம்பவங்களோ நடக்கவில்லை. எனவே தூத்துக்குடி போலீசார் பதிவு செய்த வழக்கில் இருந்து எனக்கு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
அரசு வக்கீல் ஆட்சேபம்
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் வக்கீல் அன்புநிதி ஆஜராகி, மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டுவிட்டர் தகவலை பரிமாறியுள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஒரு பதற்றமான சூழல் நிலவியது. எனவே இவரிடம் முறையாக விசாரிக்க வேண்டியுள்ளதால், அவருக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
நீதிபதி கருத்து
இதையடுத்து நீதிபதி, தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதைபோல சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டு உள்ளன. இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போன்ற பதற்றமான சூழலும் நிலவியது என கருத்து தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கு குறித்து போலீஸ் தரப்பில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.