ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தீ விபத்து: பறிமுதலான 2 பஸ்கள் எரிந்து நாசம்

சென்னை கே.கே.நகர் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே தீ விபத்து ஏற்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட 2 பஸ்கள் உள்பட 9 வாகனங்கள் எரிந்து நாசமாகின.

Update: 2023-06-12 21:47 GMT

சென்னை,

சென்னை கே.கே.நகரில் முனுசாமி சாலை, ராஜமன்னார் சாலை சந்திப்பில் மாநகர போக்குவரத்துக்கு சொந்தமான காலி மைதானம் உள்ளது. ஆர்.டி. ஓ. அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த மைதானத்தில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளில் சிக்கிய வாகனங்கள் ஆர்.டி.ஓ. அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 30 வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று இரவு 8.45 மணியளவில் இந்த மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீ மளமளவென கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்ததும் அசோக்நகர், கே.கே.நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

9 வாகனங்கள் நாசம்

தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் 2 தனியார் சொகுசு பஸ்கள், ஒரு லாரி, ஒரு மேஜிக் ஆட்டோ, 2 கார் உட்பட 9 வாகனங்கள் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடாகின. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் மற்ற வாகனங்கள் தீ விபத்தில் இருந்து தப்பின.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்