பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

பழனி, சின்னமனூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-04-16 19:00 GMT

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. அதன்படி, பழனியில் நேற்று மாலை 4 மணி அளவில் பாதவிநாயகர் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கியது.

பின்னர் சன்னதிவீதி, அடிவாரம் ரோடு, மயில் ரவுண்டானா, வேல் ரவுண்டானா, மார்க்கெட் ரோடு, பெரியகடைவீதி தெற்கு ரதவீதி வழியாக சென்று தேரடி பகுதியில் நிறைவு பெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 700-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின்போது அனைவரும் சங்க சீருடை அணிந்து சென்றனர்.

பின்னர் தேரடி பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொடி ஏற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு பழனி சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து, சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி கோட்ட பொறுப்பாளர் இளங்குமார் சம்பத், மதுரை கோட்ட தலைவர் அம்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

சுய ஒழுக்கம், கட்டுப்பாடு

கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருச்சி கோட்ட பொறுப்பாளர் இளங்குமார் சம்பத் பேசும்போது, பல்வேறு தடைகள், சட்ட போராட்டம் நடத்தி இந்த ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி உள்ளோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்பது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் சரி, சுதந்திரத்துக்கு பின்பும் சரி பேரிடர் காலத்தில் பல்வேறு சேவைகளை செய்துள்ளது. கடந்த கொரோனா காலத்திலும், அமைப்பின் சார்பில் நமது நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கினர். சுயஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவை கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. நாடு வளம் பெற, ஒழுக்கமான ஒரு சமுதாயத்தை படைக்க, அனைத்து பகுதிகளிலும் அமைப்பை வளர்க்க வேண்டும். எவ்வித பாகுபாடும் இன்றி உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். நமது நாடு சமூக, பொருளாதா ரீதியாக வளர்ச்சி அடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

இதில் மாநில மனித உரிமைகள் கழக பொறுப்பாளர் மின்னல்கொடி, சிவயோகி சீனிவாச ஆச்சாரியார், அமைப்பின் மாவட்ட தலைவர் குப்புசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக பழனியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்தையொட்டி திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார், சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊர்வலத்தின்போது ஏதும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க பாதவிநாயகர் கோவில் பகுதியில் 2 'வஜ்ரா' நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் நகரின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்