ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஏன் தடைசெய்யவில்லை?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஏன் தடைசெய்யவில்லை? என்று மதுரையில் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
மதுரை அண்ணாநகரில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மணிவிழா மற்றும் சனாதன சக்திகளை தனிமைப் படுத்துவோம் எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, எம்.பி.க்கள் வெங்கடேசன், நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மதுரை மேயர் இந்திராணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசும் போது, ஆ.ராசா பேசியதில் தவறில்லை. ஆ.ராசா பேசியதை நான் வழிமொழிகிறேன். சனாதனம் குறித்து பேச கூடாது என்கிறீர்கள். மனு தர்மத்தில் உள்ளதை தான் சொல்கிறோம் என்றார்.
கூட்டத்தில் வைகோ பேசும் போது, இந்தியா எனும் பெயரில் இந்தியை வைத்து ஆட்சி நடத்த நினைக்கிறார்கள். அதை எதிர்த்து தென் இந்தியாவிற்கு தலைமை தாங்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்க வேண்டும் என்றும் சொன்னார் திருமாவளவன். அதை நானும் இங்கே வழிமொழிகிறேன் என்றார். கூட்டத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:- பா.ஜனதா இந்துக்களுக்கானது அல்ல. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்து உள்ளீர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஏன் தடைசெய்யவில்லை? அது என்ன ஜனநாயக இயக்கமா? இந்த முறை எக்காரணம் கொண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர கூடாது. அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே சனாதனத்திற்கு எதிராக அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சியினரும் ஓரணியில் திரள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தொல்.திருமாவளவன் குறித்த புத்தகத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் பி.மூர்த்தி, எம்.பி.க்கள் வெங்கடேசன், நவாஸ்கனி ஆகியோர் வெளியிட்டனர்.