சென்னையில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி; மத்திய இணை மந்திரி எல்.முருகன் பங்கேற்பு
சென்னை கொரட்டூரில் நேற்று ஆர்.எஸ்.எஸ்.பேரணி அமைதியாக நடந்து முடிந்தது. பேரணியில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.;
சென்னை,
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது. அதன்படி, தமிழகத்தில் சென்னை உள்பட 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த முடிவு செய்து அனுமதி கோரி போலீசாரிடம் விண்ணப்பித்தனர். அதே நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மனித சங்கிலி போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தனர்.
இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அனுமதி
இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பர் 4-ந்தேதி தனி நீதிபதி விசாரித்து, 6 இடங்களை தவிர 44 இடங்களில் உள் அரங்குகளில் மட்டுமே கூட்டத்தை நடத்த உத்தரவிட்டார். இதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகிகள் ஏற்க மறுத்து சென்னை ஐகோர்ட்டில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஒழுக்கத்தை கடைபிடித்து பேரணி நடத்த வேண்டும் என்றும், பிறரை தூண்டும் வகையில் செயல்பாடுகள் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
பேரணி நடந்தது
பேரணிக்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 16-ந்தேதி 45 இடங்களில் பேரணி நடைபெறும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிவித்தது. அந்த வகையில், சென்னை கொரட்டூரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் இருந்து நேற்று மாலை 4.15 மணியளவில் பேரணி தொடங்கியது. முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். கொடிக்கு மூத்த பெண் நிர்வாகிகள் ஆரத்தி எடுத்தனர்.
இந்த பேரணியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார். பேரணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தென்பாரத தலைவர் வன்னியராஜன், அனைத்து செட்டியார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அருணாச்சலம், சென்னை மாநகர தலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்து ரமேஷ் நாடார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
1,200 பேர் பங்கேற்பு
இந்த பேரணியானது, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கொரட்டூர் மத்திய நிழற்சாலையில் இருந்து தொடங்கி, கிழக்கு நிழற்சாலை, கொரட்டூர் பஸ் நிலையம் வழியாக 5.15 மணிக்கு விவேகானந்தா பள்ளிக்கு வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் கூலி தொழிலாளர்கள், மாணவர்கள், தொழிலதிபர்கள் என பலதரப்பட்ட வர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரையில் இந்த பேரணி நடந்தது.
இந்த பேரணியில், அம்பத்தூர், வடபழனி, திருவொற்றியூர், பெரம்பூர் ஆகிய 4 பகுதிகளை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் விவேகானந்தா பள்ளி வளாகத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தென்பாரத தலைவர் வன்னியராஜன் பேசியதாவது:-
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு 45 இடங்களில் நடந்து முடிந்துள்ளது. நாம் ஒரே குறிக்கோளோடு வேலை செய்து வருகிறோம். விவேகானந்தர் என்ன விரும்பினாரோ, அதை ஆர்.எஸ்.எஸ். செய்து வருகிறது. அவர் எதிர்பார்த்த இளைஞர்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
அனைவரும் இணைய வேண்டும்
அம்பேத்கரின் கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்கும் அமைப்பாகவும் இது இருக்கிறது. தேசத்தைத் தெய்வமாக போற்றக் கூடியவர்களை ஆர்.எஸ்.எஸ். தயார் செய்கிறது. அதை அமைதியாக செய்ய வேண்டியிருப்பதால், இங்கு ஆரவாரத்துக்கும், பிரசாரத்துக்கும் இடமில்லை. இந்து சமுதாயம் உறக்கத்தில் இருக்கிறது. அது கொஞ்சம் கண் திறந்ததாலேயே ஏராளமானோருக்கு கலக்கம் இருக்கிறது. ஜாதி வேறுபாடுகளை மறந்து, இந்து சமுதாய பணிகளில் அனைவரும் இணைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல, பேரணி சென்ற முக்கிய இடங்களில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, உயரமான கட்டிடங்களில் நின்று கொண்டும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊரப்பாக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரப்பாக்கம், செங்கல்பட்டு வேதாச்சலம் நகரிலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார்தூண் பகுதியிலும் ஆர்எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் பகுதியில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.