'ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு கவர்னர் புத்தி சொல்லட்டும்' - அமைச்சர் மனோ தங்கராஜ்
கவர்னர் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு புத்தி சொல்லட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.;
கன்னியாகுமரி,
சென்னை ஐ.ஐ.டி.யில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, திராவிட சித்தாந்தம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறது என்று குறிப்பிட்டார். இந்நிலையில் கவர்னரின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கன்னியாகுமரியில் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"திராவிடம் என்பது தாழ்ந்து, பணிந்து கிடக்கக்கூடிய மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபடும் மகத்தான இயக்கம். இந்த இயக்கத்தின் கருத்துகளை பிரிவினைவாத கருத்து என்று ஒருவர் நினைப்பார் என்றால், எங்களை பிரிவினைவாதிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.
இதுபோன்ற சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சக்கூடிய இயக்கத்தினர் நாங்கள் அல்ல. கவர்னர் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு புத்தி சொல்லட்டும். சாதி என்பது சமூகங்களை இணைக்கக்கூடியது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை இளைஞர் சமுதாயத்தின் மீது திணிக்க முயலும் அவர்கள் பிரிவினைவாதிகளா? அல்லது சமூக ஒற்றுமையை வலியுறுத்தக் கூடிய திராவிட சித்தாந்தம் பிரிவினைவாதமா? என்பதை மக்களே முடிவு செய்வார்கள்."
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.