ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
பெரம்பலூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நேற்று மாலை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தியுள்ளது. மேலும் ஏராளமான பள்ளி மாணவர்கள் கொண்டு ஊர்வலம் நடத்தப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. குழந்தை பருவம் முதலே மதவாதத்தை தூண்டுகின்ற வகையில் பள்ளி மாணவர்களை வைத்து கொண்டு ஆர்.எஸ்.எஸ். ஈடுபடுகிறது. தமிழக மக்கள் அறிவாளிகள், படித்தவர்கள் பன்முகத்தன்மையுடையவர்கள், மதசார்பின்மையை விரும்புகிறவர்கள், ஆகையால் ஆர்.எஸ்.எஸ். எண்ணம் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.