ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு -ஐகோர்ட்டு உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-01-25 00:27 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், 50 இடங்களிலும் அனுமதி வழங்கவில்லை என்று கூறி தமிழ்நாடு டி.ஜி.பி., உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

சட்டவிரோதம்

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா, வக்கீல் ரபுமனோகர் உள்ளிட்டோர் ஆஜராகி, "கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை மாற்றியமைத்து சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டது தவறு. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை தமிழ்நாட்டில் ஏற்படும் என ஆதாரங்களுமின்றி ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது சட்டவிரோதம்.

அதே காலகட்டத்தில் பிற அமைப்புகள் 500 இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது பாரபட்சமான நடவடிக்கையாகும். ஒருபுறம் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது எனக்கூறிவிட்டு, மறுபுறம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை எனக் கூறி ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல'' என்று வாதிட்டனர்.

அமைதி பூங்கா

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்த தயாராக இருந்தபோது, அணிவகுப்பு பேரணி நடத்தப்படாது என்று ஆர்.எஸ்.எஸ். அறிவித்து விட்டது. எனவே இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை. அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடங்கும். 500 இடங்களில் போராட்டங்களுக்குத்தான் அனுமதியளிக்கப்பட்டது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அல்ல. வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனைத்து மத நம்பிக்கைகளையும் பாதுகாத்து தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ வேண்டும் என்பதால் தான் முன்னெச்சரிக்கையாக உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையி்ல் தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்த பிறகு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரின் பாதுகாப்புக்காக 50 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்'' என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்